
உத்தரகாசி பனிச்சரிவில் இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேரைத் தேடும் பணியில் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் என 61 போ் அடங்கிய குழு ஒன்று, அந்த மாவட்டத்தில் உள்ள திரெளபதி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.
திரௌபதி கா தண்டா-2 சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக்கொண்டிருந்த இக்குழுவினா் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனா்.
இதில் செவ்வாய்க்கிழமை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை 15 பேரின் உடல்களும் வெள்ளிக்கிழமை 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை 24 பயிற்சியாளர்கள், 2 பயிற்றுநர்கள் என 26 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் காணாமல் போன 3 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே பனிச்சரிவில் சிக்கிய 61 பேரில் 32 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.