காங். தேர்தலில் கார்கேவுக்கு சோனியா காந்தி ஆதரவா?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி என்னை பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் எனக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுவது பொய் என்றும் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 
காங். தேர்தலில் கார்கேவுக்கு சோனியா காந்தி ஆதரவா?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி என்னை பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் எனக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுவது பொய் என்றும் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும் சசி தரூரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் போட்டியிலிருந்து விலகினார். அதுபோல, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதியின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங் போட்டியிடுவதாக அறிவித்து, பின்னர் கார்கே போட்டியிடுவதால் தான் விலகுவதாகக் கூறினார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கேவுக்கும் சசி தரூருக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. 

இதில், கடைசி நேரத்தில்தான் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சோனியா காந்திதான் கார்கேவை போட்டியிட பரிந்துரை செய்ததாகவும் சோனியா காந்தி, கார்கேவுக்குத்தான் முழு ஆதரவு அளிப்பதாகவும் பேசப்பட்டது. கட்சியை வழிநடத்த சோனியா காந்தி கூறியதாகவும் சமீபத்தில் ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து பதில் அளித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி தன்னுடைய பெயரை ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்றும் தனக்கு ஆதரவு தெரிவிப்பதாக வரும் செய்தியும் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என்றும் விளக்கமளித்துள்ளார். 

'மேலும், நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் பங்கேற்க மாட்டார்கள், எந்த வேட்பாளரையும் அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று சோனியா காந்தி ஏற்கெனவே தெளிவாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தியையும், என்னையும் இழிவுபடுத்துவதற்காக யாரோ இந்த வதந்தியை பரப்பியுள்ளனர். தொண்டர்கள் சிலர் என்னை போட்டியிட வற்புறுத்தினார்கள். அதனால்தான் போட்டியிடுகிறேன். 

மேலும், நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. மோடியும் அமித் ஷாவும் ஜனநாயகத்திற்கு எதிராக அரசியல் செய்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் பலவீனமடைந்து வருகின்றன. அவர்களை எதிர்த்துப் போராட எனக்கு அதிகாரம் வேண்டும். அதனால்தான், பிரதிநிதிகளின் பரிந்துரையை ஏற்று நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்று கூறியுள்ளார். 

இதனால் சோனியா காந்தி ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு கார்கே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதுபோல, காங்கிரஸ் தலைவரானால் தன்னை யாரும் இயக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

தற்போதைய சூழலில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூருக்கும் ஆதரவு அதிகமிருந்தாலும் கார்கே வெற்றி பெறவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com