
குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில், குஜராத் கௌரவ் யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.
குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் வகையில், பல்வேறு திட்டங்களை நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அகமதாபாத் வந்துள்ள அமித் ஷா சன்சர்காவில் உள்ள சந்த் ஸ்ரீ சவையநாத் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன்பிறகு, அவர் ஜான்சர்காவில் குஜராத் கௌரவ் யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
பிற்பகலில், மத்திய உள்துறை அமைச்சர், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள உனை மாதா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து, அங்கு குஜராத் கௌரவ் யாத்திரை மற்றும் ஆதிவாசி விகாஸ் யாத்திரையைத் தொடங்க உள்ளார்.
படிக்க: கர்நாடகத்தில் கோயிலுக்குள் நுழையவிடாமல் தலித் இளைஞர் தடுத்து நிறுத்தம்!
முன்னதாக புதன்கிழமை, ஜெ.பி.நட்டா மெஹ்சானாவில் குஜராத் கெளரவ் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நட்டா பேசினார். அப்போது அவர் பாஜக ஒரு பொறுப்புணர்வு கொண்ட அரசு. மக்களின் துயரத்தை பாஜக அரசு புரிந்துகொள்கிறது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது? என்று அவர் பேசினார்.
மேலும், கௌரவ் யாத்திரை என்பது குஜராத்திற்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமையை நிலைநாட்டும் யாத்திரையாகும். குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்று அவர் பேசினார்.