நாட்டிலேயே முதன் முறையாக கிருஷ்ணா நதி மீது ரூ.1,082 கோடி செலவில் கேபிள் பாலம்!

நாட்டிலேயே முதன் முறையாக, ரூ.1,082 கோடி செலவில் தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதமாக கிருஷ்ணா நதி மீது 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கேபிள் (கம்பி) பாலம் அமையவுள்ளது.
சோமசீலா-சித்தேஸ்வரம் மாதிரி கேபிள் பாலம்
சோமசீலா-சித்தேஸ்வரம் மாதிரி கேபிள் பாலம்

ஹைதராபாத்: நாட்டிலேயே முதன் முறையாக, ரூ.1,082 கோடி செலவில் தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதமாக கிருஷ்ணா நதி மீது 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கேபிள் (கம்பி) பாலம் அமையவுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த பாலம் இரு மாநிலங்களுக்கு இடையேயான சாலை இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும். விரைவில் கிருஷ்ணா நதியின் இருபுறமும் வசிக்கும் மக்களின் ஏறக்குறைய இரண்டு தசாப்த கால கனவு நனவாகிறது. 

2007 ஜனவரி 19 ஆம் தேதி கர்னூல் மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் இருந்து தெலங்கானா நதிக்கரையில் உள்ள சிங்கோட்டம் என்ற இடத்தில் லட்சுமிநரசிம்ம சுவாமி கோவிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து 61 பயணிகள் இறந்தனர். இந்த சோகமான சம்பவத்திற்குப் பிறகு பாலத்திற்கான கோரிக்கை எழுந்தது. அப்போதைய ஆந்திரம் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, பாலம் கட்டுவதற்காக ரூ. 50 கோடியை அனுமதித்தார், ஆனால், அவரது அகால மரணம், அரசியல் நிச்சயமற்ற தன்மையுடன், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

பின்னர், அவரது வாரிசான என். கிரண் குமார் ரெட்டி ரூ.250 கோடியை அனுமதித்தாலும், திட்டம் தொடங்க முடியவில்லை. தெலங்கானா மாநிலம் உருவான பிறகு, மாநில அரசு ரூ.190 கோடியை அனுமதித்தது, ஆனால், ஆந்திரம் அரசு பாலம் கட்டுவதற்கான திட்டத்தில் அக்கறை காட்டவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், சாலை இணைப்புப் பிரச்னை மட்டுமல்ல, ஆற்றின் இருபுறமும் உள்ள மக்களால், கலாசார அம்சமும், புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்ட, குடும்ப தொடர்புகளுழ் உள்ளதால், இந்த தடுப்பணை விவகாரம் தேர்தல் பிரச்னையாக உருவெடுத்தது. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் மற்றும் கொல்லப்பூரில் உள்ள நல்லமலா வனப்பகுதியின் காரணமாக சுற்றுலாத் துறையின் தேவையையும் மேலும் தூண்டியது.

இந்த நிலையில் தெலங்கானாவில் கல்வகுர்த்தி மற்றும் கொல்லப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 122 கிமீ நெடுஞ்சாலையை ஆந்திரம் மாநிலம் கர்னூல் மாவட்டம், ஆத்மகூர் மற்றும் நந்தியால் வரை நீட்டிக்க மத்திய அரசு ரூ.1,700 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக பாலம் கட்டப்படுவதால், ஹைதராபாத் மற்றும் திருப்பதி இடையே சாலை போக்குவரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். மொத்த தூரத்தில் சுமார் 80 கிலோமீட்டர் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், நந்தியாலுக்கு செல்பவர்கள் கர்னூல் வழியாக செல்வதில் இருந்து விடுபடுவார்கள்.

இந்நிலையில், நாட்டில் முதன் முறையாக, கிருஷ்ணா நதி மீது ஆந்திரம்- தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதத்தில், ரூ.1,082.56 கோடி செலவில் கேபிள் (கம்பி) பாலம் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி உள்ளது. புதிய கேபிள் பாலத்தை உலக தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்கு வரத்து மற்றும் தேசிய நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

நிதின் கட்கரி வியாழக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டில் முதன் முறையாக, கிருஷ்ணா நதி மீது ஆந்திரம்- தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதத்தில் கேபிள் (கம்பி) பாலம் அமைப்பதற்காக ரூ.1,082.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கிருஷ்ணா நதி மீது 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமையவுள்ள இந்த கேபிள் பாலத்திற்கான பணிகள் 30 மாதங்களில் நிறைவடையும். பாலத்தின் கட்டுமான பணிகள் "முடிந்த பிறகு, இந்த பாலம் உலகில் 2 ஆவது மற்றும் நாட்டின் முதல் கேபிள் பாலமாக பெயர் பெறும்," என்று கட்கரி கூறியுள்ளார். 

"தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சோமசீலா பகுதியில் தொடங்கும் இந்த கேபிள் மேம்பாலம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், ஆத்ம கூரில் நிறைவடையும். நல்லமல்லா வனபகுதி அருகே அமைக்கப்படவுள்ள இந்த பாலத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்ணாடி பாதசாரி நடைபாதை, கோபுரம் போன்ற கோபுரம், இரவில் சிறப்பு மின் அலங்காரம் போன்ற பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கும்," என்று அவர் கூறினார், இந்த பாலம் தெலங்கானா பக்கத்தில் உள்ள லலிதா சோமேஸ்வர ஸ்வாமி கோவில், ஆந்திரம் மாநிலத்தில் உள்ள சங்கமேஸ்வரம் கோவிலின் கவர்ச்சிகரமான காட்சியை வழங்கும். 

மேலும், இதில் நடந்து செல்வோர் மிக அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். பசுமையாக இருக்கும் வனப்பகுதிகள், கிருஷ்ணா நதியின் அழகு, ஸ்ரீசைலம் அணைக்கட்டு. மலைப் பகுதி என அனைத்தையும் ஒரே சமயத்தில் இந்த பாலத்தின் மூலம் கண்டு ரசிக்கலாம். 

இந்த கேபிள்பாலம் பணிகள் நிறைவடைந்தால், திருப்பதி-ஹைதராபாத்அந்நகரங்களுக்கிடையிலான பயண தூரம் சுமார் 80 கிலோ மீட்டர் வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com