நிதீஷ் குமாரை அவமதித்தாரா சந்திரசேகர் ராவ்? என்ன நடந்தது? வைரல் விடியோ!

பிகார் மாநிலம் பாட்னாவில் நேற்று(புதன்கிழமை) நிதீஷ் குமார்- சந்திரசேகர் ராவ் கூட்டு செய்தியாளர் சந்திப்பு விடியோ ஒன்று அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. 
நிதீஷ் குமாரை அவமதித்தாரா சந்திரசேகர் ராவ்? என்ன நடந்தது? வைரல் விடியோ!

பிகார் மாநிலம் பாட்னாவில் நேற்று(புதன்கிழமை) நிதீஷ் குமார்- சந்திரசேகர் ராவ் கூட்டு செய்தியாளர் சந்திப்பு விடியோ ஒன்று அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகா் ராவ் முயற்சித்து வருகிறார். இதையொட்டி அவர் பல்வேறு மாநில அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். 

நேற்று(புதன்கிழமை) பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாரை பாட்னாவில் சந்தித்துப் பேசினார். அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதீஷ் குமாா், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து பிகாரில் புதிய அரசை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து பிகார் மாநில அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சந்திரசேகர் ராவ் பேசினார். 

இதன்பின்னர் நிதீஷ் குமாரும், சந்திரசேகா் ராவும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது சந்திரசேகா் ராவ் கூறுகையில், ‘மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டில் இருந்து தொழில் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்காமல் ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படுகின்றன. மாநிலங்களின் பிரச்னைகளில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது.

பாஜகவின் அரசியல் எதிரிகளைக் குறிவைக்க சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. எனவே, மாநிலங்களில் விசாரணை நடத்த சிபிஐக்கு அளித்துள்ள அனுமதியை மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும். 

பாஜக இல்லாத இந்தியா அமைவதே தற்போதைய அவசியமாகும். ‘பாஜக இல்லாத இந்தியா’ என்ற முழக்கத்தை அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எழுப்ப வேண்டும். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யாா்? எதிா்க்கட்சிகளின் பிரதமா் வேட்பாளா் யாா்? கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுமா உள்ளிட்டவை குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். அதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை' என்று பேசினார்.  

இறுதியில் செய்தியாளர்கள் கேசிஆரிடம் சில கேள்விகளை எழுப்பினர். பிகார் அரசின் தற்போதைய கூட்டணி குறித்து கேசிஆரிடம் கேள்வி கேட்க, அவர், 'இதைச் சொல்வதற்கு நான் யார்?' என்று கூற,உடனே  நிதீஷும் தேஜஸ்வி யாதவும் இருக்கையை விட்டு எழுந்தனர். அப்போது கேசிஆர், 'நான் அமர்ந்திருக்கிறேன், நீங்களும் உட்காருங்கள்' என்று ஒரு பத்திரிகையாளரிடம் கூறினார். நிதீஷ்குமாரையும் அமருமாறு சைகை செய்தார் கேசிஆர். 

2024 மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் இருப்பாரா, அதில் காங்கிரஸின் பங்கு இருக்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கேசிஆர் பதில் சொல்ல ஆரம்பித்ததும், நிதீஷ் குமார் மீண்டும் எழுந்து இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கேசிஆரை வலியுறுத்தினார்.

'அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கப் பாடுபடுவோம். நாங்கள் அமர்ந்து விவாதிப்போம். கருத்தொற்றுமையில் என்ன முடிவெடுத்தாலும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும், ஏனென்றால் பிராமணர் இல்லாமல் எந்தத் திருமணமும் நடக்காது. நீங்கள் (ஊடகங்கள்) இல்லாமல் எதுவும் நடக்காது" என்று கேசிஆர் கூறினார். இதற்கு அனைவரும் சிரித்தனர். 

பின்னர் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் நிதீஷ் குமார் என பத்திரிகையாளர்கள் சொன்னபோது, அதுகுறித்து கேட்க வேண்டாம் என்று நிதீஷ் குமார் சைகை செய்தார். 

'நாம் போகலாம்... இவையெல்லாம் போலியானவை. இவர்களின் வலையில் விழ வேண்டாம்' என்று நிதீஷ் குமார் கூற, கேசிஆர் 'பதில் சொல்லிவிட்டு வருகிறேன், இருங்கள்' என்று கூறுகிறார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 

நிதீஷ் குமாரை கேசிஆர் அவமதித்துவிட்டதாக பாஜகவினர் விமரிசித்து வருகின்றனர். 

'இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பை நான் பார்த்ததில்லை. கேசிஆர், நிதீஷ் குமாரை அவமானப்படுத்திவிட்டார்' என்று பாஜக தலைவர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். 

மறுபுறம், பாஜகவின் அமித் மாளவியா, இதில், கேசிஆர் பேசிக்கொண்டிருந்தபோது நிதீஷ் குமார் எழுந்ததுதான் தவறு, கேசிஆர் தான் அவமானப்படுத்தப்பட்டார். கேசிஆர் இப்படி அவமானப்படுவதற்காகத்தான் பாட்னா சென்றாரா? செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்தை நிறைவு செய்யும் அடிப்படை மரியாதையைக்கூட நிதிஷ் குமார் அவருக்கு வழங்கவில்லை. கேசிஆர் விடுத்த வேண்டுகோளையும் நிதீஷ் நிராகரித்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார். 

அதுபோல சுஷில் மோடி, 'பிரதமர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்கவே கேசிஆரை நிதீஷ் குமார் அழைத்துள்ளார். ஆனால், கேசிஆர் அவரது பெயரைச் சொல்லவில்லை. நிதீஷ் எழுந்து மேடையை விட்டு வெளியேற முயன்றபோது அங்கிருந்தவர்கள் ராகுல் காந்தியின் பெயரைக் கோஷமிட்டனர். இதை விட அவமானம் இன்னும் என்ன இருக்க முடியும்?' என்று விமர்சித்துள்ளார். 

செய்தியாளர் சந்திப்பிலேயே ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து ஒத்துழைக்கவில்லை என்றால் கூட்டணி எப்படி சாத்தியம்? என்றும் பாஜக தரப்பில் கேள்வி எழும்பியுள்ளது. 

ஆனால், இந்த விடியோவைப் பார்க்கும்போது இது மிகவும் இயல்பாகத்தான் இருப்பதாகவும் அவமதிப்பு ஏதும் இல்லை என்றும் பாஜகவினர்தான் இந்த விஷயத்தை பேசுபொருளாக்குவதாகவும் பொதுவான சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். 

எனினும், இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டுவர, பாஜகவினரின் விமர்சனங்களுக்கு நிதீஷ் குமாரும், சந்திரசேகர் ராவும்தான் பதில் அளிக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com