பைக்கை தொட்டது குற்றமா? தலித் மாணவருக்கு நேர்ந்த கொடுமை!
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தைத் தொட்ட காரணத்துக்காக, தலித் மாணவன் வகுப்பறையில் அடைத்துவைத்து உலோக கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நாக்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரனௌபூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது.
ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவின் இருசக்கர வாகனத்தைத் தொட்டுப் பார்த்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவனை வகுப்பறையில் அடைத்துவைத்து, உலோக கம்பி மற்றும் துடைப்பத்தால் தாக்கி, கழுத்தை நெரித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்து பள்ளியின் மற்ற ஊழியர்கள் மாணவனை மீட்டனர்.
இதையடுத்து, மாணவன் நடந்ததைப் பெற்றோரிடம் கூறியதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
ஆத்திரமடைந்த மாணவரின் குடும்பத்தினர் சனிக்கிழமை பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகப் பள்ளி நிர்வாகம் குடும்ப உறுப்பினர்களுக்கு உறுதியளித்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.