தனியார் ரயில்களுக்கான கட்டணங்களை நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்: ரயில்வே பச்சைக்கொடி

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 150 தனியார் ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
தனியார் ரயில்களுக்கான கட்டணங்களை நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்
தனியார் ரயில்களுக்கான கட்டணங்களை நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்


புது தில்லி: நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 150 தனியார் ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

மத்திய மற்றும் தனியார் பங்களிப்புடன் 150 வழித்தடங்களில் இரு மார்கங்களிலும் பயணிகள் ரயிலை இயக்கும் தனியார் நிறுவனங்களே, ரயில் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு வழித்தடங்களில், நன்கு வருவாய் ஈட்டக்கூடிய வழித்தடங்களை கண்டறிந்து, அவற்றை தனியாருக்கு விட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து, ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் தனியார் ரயில்கள் இயக்கப்படும்.

பொதுத் துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம், இந்திய ரயில்வே ரூ.30,000 கோடி வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக, இந்திய ரயில்வே, 150 வழித்தடங்களில் இரு மார்கங்களிலும் தனியார் ரயில்களை இயக்குவதற்கான நடைமுறைகளைக் கண்டறிந்துள்ளது. இந்த திட்டம் வெற்றிபெற்றால், அடுத்தடுத்து வழித்தடங்கள் அதிகரிக்கப்படும் என்று நன்கு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே தொடர்பில் தற்போதிருக்கும் 12 ரயில் மண்டலங்களில் இந்த ரயில்கள் அனைத்தும் ஒரு மண்டலமாக இருக்கும். இந்த அனைத்து ரயில்களும் குறைந்தபட்சம் 384 மீட்டர் அதாவது கிட்டத்தட்ட 16 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இந்த ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம்தான், நிதி, கொள்முதல், ரயில்களை இயக்குதல் மற்றும் ரயில்களை பராமரித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும்.

இந்திய ரயில்வே மற்றும் தனியார் நிறுவனங்களின் நலன்கள் இரண்டையுமே சமநிலைப்படுத்தும் வகையில்தான் இந்த திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தனியார் ரயில்களை இயக்குவதன் மூலம், இந்திய ரயில்வேயும் தனது உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள இயலும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com