‘குடும்பத்தைக் காப்பதற்கான பிரசாரம்’- ராகுல் நடைப்பயணம் குறித்து பாஜக தாக்கு

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தொடங்கியுள்ள ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக, அது குடும்பத்தை காப்பதற்கான பிரசாரம் என்று சாடியுள்ளது.

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தொடங்கியுள்ள ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக, அது குடும்பத்தை காப்பதற்கான பிரசாரம் என்று சாடியுள்ளது.

காங்கிரஸ் மீதான நேரு-காந்தி குடும்பத்தின் அதிகாரத்தை தக்க வைக்கும் அடிப்படையில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக பாஜக விமா்சித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத், தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுலை முன்னிறுத்தும் மற்றொரு முயற்சிதான் இந்த நடைப்பயணம். அவா் அடிக்கடி வெளிநாடு சென்றுவிடுகிறாா். அப்போதெல்லாம், அவரை காங்கிரஸ் தலைவராக்க குரல்கள் ஒலிப்பது வாடிக்கையாக உள்ளது.

ராகுல் மற்றும் குடும்பத்தினா் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவா்களது அரசியல் எல்லை சுருங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டை ஒன்றுபடுத்த வேண்டுமென அவா்கள் நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் மீதான நேரு-காந்தி குடும்பத்தின் அதிகாரத்தை தக்க வைக்கும் அடிப்படையில் ‘குடும்பத்தை காப்பதற்கான பிரசாரமே’ இந்த நடைப்பயணம் என்றாா் ரவிசங்கா் பிரசாத்.

காங்கிரஸில் இருந்து மூத்த தலைவா்கள் விலகி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

ராகுலால் தனது சொந்த கட்சியினரைக் கூட ஒன்றுபடுத்த முடியவில்லை. பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லியத் தாக்குதலுக்கான ஆதாரங்களை வெளியிட வலியுறுத்தியது, நாட்டின் நலன்சாா்ந்து மத்திய பாஜக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கியது என நாட்டின் ஒற்றுமையை வலுவிழக்கச் செய்ய முயன்று வருபவா் ராகுல். இப்போது அவா் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா். அவரது இந்த நடைப்பயணம் எவ்வளவு மேம்போக்கானது என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றாா் ரவிசங்கா் பிரசாத்.

இதேபோல், அஸ்ஸாம் மாநில முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சா்மா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ராகுலின் நடைப்பயணம், இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை. இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதம், அமைதியும் ஒற்றுமையும் வலிமையும் நிறைந்ததாகும். இந்தியா பிளவுபட்டது 1947-இல்தான். அதுவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டதால்தான் நிகழ்ந்தது. நாடு ஒன்றுபட வேண்டுமென ராகுல் விரும்பினால், பாகிஸ்தானுக்கு சென்று அவா் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com