பார்வையை இழக்கப்போகும் பிள்ளைகள்: புரட்சிகரமாக யோசித்த பெற்றோர்! பாராட்டுகள்

பார்வையை இழக்கும் முன், அவர்கள் இந்த உலகைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக, உலகை சுற்றிக்காட்ட புறப்பட்டுவிட்டனர்.
பார்வையை இழக்கப்போகும் பிள்ளைகள்: புரட்சிகரமாக யோசித்த பெற்றோர்! பாராட்டுகள்


தங்களது நான்கு பிள்ளைகளில் 3 பேர் பார்வையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று அறிந்த பெற்றோர், பார்வையை இழக்கும் முன், அவர்கள் இந்த உலகைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக, உலகை சுற்றிக்காட்ட புறப்பட்டுவிட்டனர்.

தங்களது மூன்றே வயதான மகள் மியாவுக்கு பார்வையில் கோளாறு இருப்பதை அறிந்த பெற்றோர் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அறிய வகை மரபணுக் கோளாறு இருப்பதும், மெல்ல அவர் பார்வையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் கண்டறியப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட எடித் லீமே - செபாஸ்டியன் பெல்லெடையர் தம்பதியர், 7 மற்றும் 5 வயதாகும் தங்களது மற்ற இரண்டு மகன்களுக்கும் அதே பார்வை இழப்பு அறிகுறிகள் தென்படுவதை அறிந்து வேதனை அடைந்தனர்.

2019ஆம் ஆண்டு அவர்களது பயம் உறுதியானது. மியாவுக்கு வந்த அதே மரபணுக் கோளாறுதான் இவர்களுக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போதைக்கு இந்த வியாதியைக் குணப்படுத்தவோ, பார்வை இழப்பை தள்ளிப்போடவோ எந்த சிகிச்சையும் இல்லை. இது எந்த அளவுக்கு காலத்தை எடுத்துக் கொள்ளும் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இவர்கள் தங்களது வாழ்நாளில் மத்தியில் முழுமையாக பார்வையை இழக்க நேரிடலாம் என்று அஞ்சுகிறோம் என்றனர் பெற்றோர்.

உடனே நம்மூரைப் போல அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல், தங்கள் பிள்ளைகளுக்கு நேரப்போகும் அபாயத்தை எதர்கொள்ளும் ஆற்றலை தற்போதே வளர்க்கத் தொடங்கினர்.

இது மட்டுமல்ல, பிள்ளைகளுக்கு பார்வை நினைவாற்றலை அதிகரித்துவிட்டால், அவர்களது எஞ்சிய வாழ்வை அதனைக் கொண்டு எளிதாகக் கடக்கலாம் என்று மருத்துவர்கள் அளித்த அறிவுரையை ஏற்றுக் கொண்ட பெற்றோர், இனி இவர்களுக்கு புத்தகத்தில் யானையின் படத்தைக் காட்டப்போவதில்லை என்று தீர்மானித்தனர்.

பார்வையை இழக்கும் முன்பே, இவர்கள் ஒட்டுமொத்த உலகையும் சுற்றிப்பார்த்துவிட வேண்டும் என்றும், இவர்களது நினைவில், என்றும் நீங்காத பசுமரத்தாணி போல அழகிய காட்சிகளை பதிவு செய்து விட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

ஒரு முழு அண்டையும், ஒட்டுமொத்த உலகையும் சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலாவை திட்டமிட்டு, பெட்டி படுக்கைகளோடு ஆறு பேரும் கிளம்பிவிட்டார்கள்.

பல வகையான மக்கள், கலாசாரங்கள் அனைத்தையும் என் பிள்ளைகள் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால், தற்போது கனடாவிலிருந்து நமீபியா, துருக்கி, மங்கோலியா, இந்தோனேசியா என உலக நாடுகளை ஒரு கை பார்த்துவிட புறப்பட்டுவிட்டார்கள்.

தங்கள் வாழ்வை ஆட்டிப்படைக்க வந்த நோயைக் கூட, மாற்றி யோசித்து, பிள்ளைகளின் சாபத்தையே வரமாக்கியிருக்கிறார்கள் பெற்றோர். இவர்களது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களுக்கு ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com