காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டுக்கும் சசி தரூருக்கும் போட்டியா?

அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட்டுக்கும் சசி தரூருக்கும் இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டுக்கும் சசி தரூருக்கும் போட்டியா?

காங்கிரஸ் தலைவர் தேர்தல், அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய மாற்றமாக, நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகும் அறிகுறிகள் தென்படுகின்றன. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சி கூறியுள்ளது. 

ஆரம்பம் முதலே ராகுல் காந்தி, 'கட்சிக்காக உழைப்பேன், பிரசாரம் செய்கிறேன், ஆனால் கட்சியின் தலைவராக விருப்பமில்லை' என்று கூறி வருகிறார். 

சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில்கூட, 'தேர்தல் மூலம் மட்டுமே தலைவர் பதவி நிரப்பப்படும். நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். எனது மனதில் எவ்விதக் குழப்பமும் இல்லை' என்று கூறினார். 

இதனிடையே, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர். 

தமிழகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ராகுல், காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி இதுவரை இசைவு தெரிவிக்கவில்லை. 

அடுத்ததாக, ராகுல் காந்தி போட்டியிட மறுப்பு தெரிவிக்கும்பட்சத்தில், அவருக்கு ஆதரவு தெரிவித்த ராஜஸ்தான் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

சோனியா காந்தி மட்டுமின்றி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியுடனும் அசோக் கெலாட் நல்ல நட்பு பாராட்டியவர். கட்சியின் பல்வேறு முக்கிய முடிவுகளில் பங்கெடுத்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். 

இவருக்குப் போட்டியாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் களமிறங்க உள்ளதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலையொட்டி கட்சியில் சீர்திருத்தங்கள் செய்ய காங்கிரஸ் கட்சியினர் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கட்சியில் பதவி, பதவியில் இருப்போரில் 50% பேர் 50 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவு தெரிவித்து சசி தரூர் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. 

சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்த அடுத்த நாளே (திங்கள்கிழமை) தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசி தரூர் விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், தான் தலைவர் தேர்தலில் போட்டியிட கட்சியினரில் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் அவர் தேர்தலில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளது. 

இப்போதைய சூழ்நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியை மறுக்கும்பட்சத்தில் அசோக் கெலாட்டுக்கும் சசி தரூருக்கும் இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதில் ராகுல் காந்தி தலைவராக அசோக் கெலாட் ஆதரவு தெரிவித்தவர். காந்தி குடும்பத்தில் ஒருவர் தலைவராக எதிர்ப்பு தெரிவித்த ஜி-23 தலைவர்களில் சசி தரூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேரு குடும்பம் அல்லாத ஒருவர் தலைவராக சோனியா, ராகுல் இருவரும் ஆதரவு தெரிவிப்பதாலும் காங்கிரஸ் தலைவர் தேர்தல் மிகவும் வெளிப்படையாக நேர்மறையாக நடக்கும் என்பதாலும் மேலும் சிலர் போட்டியிடக் கூடும் என்று கருதப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com