‘இப்போ நாப்கின் கேட்பீங்க, அப்புறம் ஆணுறை கேட்பீங்களா’: ஐஏஎஸ் அதிகாரியின் திமிர் பேச்சு

பிகார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியின் கேள்விக்கு அருவறுப்பான பதிலளித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற கருத்தரங்கு
பாட்னாவில் நடைபெற்ற கருத்தரங்கு

பிகார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவியின் கேள்விக்கு அருவறுப்பான பதிலளித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.

பாட்னாவில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் `அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பிகார்’ என்ற தலைப்பில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜோத் கெளர் பம்ரா கலந்து கொண்டு மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ரியா குமாரி என்ற மாணவி, ரூ. 20 முதல் 30 வரையிலான சானிட்டரி நாப்கின்களை அரசால் எங்களுக்கு வழங்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ஹர்ஜோத், “இதுபோன்ற கோரிக்கைகளுக்கு முடிவு உண்டா? நாளைக்கு ஜீன்ஸ் பேண்டும், அழகான காலணிகளும் கேட்பீர்கள். இறுதியாக குடும்ப கட்டுப்பாட்டு முறைக்கு அரசு ஆணுறை வழங்க வேண்டும் என்பீர்கள்” என்று அருவறுப்பான பதிலளித்துள்ளார்.

ஹர்ஜோத்தின் இந்த பதிலை கேட்ட மாணவிகளும், அங்கிருந்த அதிகாரிகளும் அதிர்ந்து போயினர். ஆனால், மாணவி ரியா குமாரியோ ஹர்ஜோத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடவில்லை.

தொடர்ந்து, அரசை தேர்தெடுக்க வாக்களிப்பது மக்கள்தானே, இவர்களின் வாக்குகள்தானே அரசை உருவாக்கிறது என மற்றொரு கேள்வியை எழுப்பினார்.

அடுத்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஹர்ஜோத், அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் அடுத்த தேர்தலில் வாக்களிக்கவே வேண்டாம். பாகிஸ்தான் போல மாறிவிடுங்கள் என்று மற்றொரு பகீர் பதிலளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாணவி ரியா குமாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது கேள்வியில் எந்த தவறும் இல்லை. என்னால், நாப்கின்னை வாங்க முடியும். ஆனால், குடிசைகளில் வாழுபவர்களால் வாங்க முடியாது. நான் எனக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து மாணவிகளுக்காகவும் தான் கேட்டேன். நங்கள் கோரிக்கை வைக்கத்தான் சென்றோம், சண்டையிட அல்ல” என்றார்.

கருத்தரங்கில் ஹர்ஜோத் பேசிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில், எனது வார்த்தைகள் யாரின் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் அவமானப்படுத்தவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ நினைக்கவில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அறிக்கையிலும்கூட வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ள ஹர்ஜோத், தனது திமிரான பேச்சுக்கு யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும், இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com