நானே வருவேன் - பார்க்கலாமா? - திரை விமர்சனம்

நாளை பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிறது.. அதனுடன் ஒப்பிடும்போது, இதற்குப் பெரிய விளம்பரம் இல்லை.. அதனால, போகலாமா வேண்டாமா என்கிற எண்ணம் தோன்றினால், இதைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்..
நானே வருவேன் - பார்க்கலாமா? - திரை விமர்சனம்

பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை  வருகிறது.. அதனுடன் ஒப்பிடும்போது, நானே வருவேன் படத்துக்குப் பெரிய விளம்பரம் இல்லை.. படத்துக்குப் போகலாமா வேண்டாமா என்கிற எண்ணம் தோன்றினால், படத்திலுள்ள பிளஸ் மற்றும் பிரச்னையைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

கதிர் மற்றும் பிரபு என இரட்டையர் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார் தனுஷ். அண்ணனாக வரும் கதிர் சிறுவயதிலேயே பெரும் தவறுகளை செய்யக்கூடிய எதற்கும் துணிந்தவராக இருக்கிறார். ஜோசியர் கூறும் காரணத்தினால், இருவரும் பிரிகின்றனர்.

20 வருடங்களுக்குப் பிறகு, பிரபு தனக்கென ஒரு மனைவி, மகள், நல்ல வேலை என அனைவரும் கண் வைக்கக் கூடிய அளவுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார். 

இதில் திருப்புமுனை உண்டாகும் வகையில் மகள் சத்யா ஒரு பிரச்னையில் சிக்குகிறார். இந்தப் பிரச்னையின் மூலம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு அண்ணன் கதிர் மீண்டும் எப்படி பிரபுவின் வாழ்க்கையில் வருகிறார். இதிலிருந்து மகள் சத்யாவை மீட்க பிரபு எந்த எல்லை வரை செல்கிறார். இறுதியில் மகள் சத்யாவின் பிரச்னைக்குத் தீர்வு கண்டாரா இல்லையா என்பதுதான் நானே வருவேன் படத்தினுடைய கதை.

டீசர், டிரெய்லர், பாடல்களிலேயே தனுஷ் இரட்டை வேடங்களில் வருவதையும், ஒருவர் நல்லவர், ஒருவர் கெட்டவர் என்பதையும் வெளிப்படுத்திவிட்டனர்.

இந்தக் கதையைத் தெரிந்துகொண்டுபோய் படத்தில் உட்கார்ந்தாலும், முதல் பாதி ஆச்சரியமளிக்கும். காரணம், நாம் டீசர், டிரெய்லரில் எதிர்பார்த்திராத பாணியில் முதல் பாதியை அற்புதமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் செல்வராகவன். 

பதின்பருவப் பெண் குழந்தையின் தந்தையின் உணர்வுகளை தனுஷ் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதி படத்துக்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பலம் சேர்த்திருக்கின்றனர்.

நாம் பார்த்த கதை வகை என்றாலும் அதைக் காலத்துக்கேற்ப அறிவியல் ரீதியாக அணுகலாம் என முயற்சித்துள்ளனர். ஆனால், அதுகுறித்து சற்று ஆழமாக விவரித்திருக்கலாமோ என்கிற எண்ணம் எழாமல் இல்லை. சொல்லக்கூடிய அளவுக்கு இது பிரச்னையில்லை. 

காரணம், இன்டர்வெல் ப்ளாக்கில் படம் ஒரு ஹை பாயிண்ட்டை தொட்ட பிறகு, மொத்த 2-ம் பாதி படத்தையுமே ஆழமாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் வருவதுதான் நிஜ சோகம்.

இதற்கு உதாரணம், படத்தின் இரண்டாம் பாதியில் யோகி பாபுவைப் பார்த்து, நீ ஏன் இவனுடன் வந்திருக்கிறாய் என நடிகர் பிரபு கேட்பார். இதற்குப் பதிலாக, நீங்கள் ஏன் வந்திருக்கிறீர்கள் என நான் திருப்பிக் கேட்டால் என்ன செய்வீர்கள் என யோகி பாபு பதிலளிப்பார்.

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு, இவர்கள் இருவரும் (நடிகர் பிரபு மற்றும் யோகி பாபு) ஏன் இரண்டாம் பாதியில் (படத்திலென்றுகூட வைத்துக்கொள்ளலாம்) வருகிறார்கள் என்ற கேள்வி எழும் என்பதை முன்கூட்டியே கணித்து செல்வராகவன் மேல் குறிப்பிட்டுள்ள உரையாடலைப் படத்தில் வைத்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது.   

இரண்டாம் பாதி தொடக்கத்திலிருந்து முற்றிலும் கதிரின் உலகம் விவரிக்கப்படுகிறது. 2-ம் பாதியில் கதிராக தனுஷ் வரும் காட்சிகளில் யுவன்ஷங்கர் ராஜா வழக்கத்தைப்போல தனது பிஜிஎம்-இல் மிரட்டியிருக்கிறார். தனுஷும் மிரட்டியிருப்பார். ஆனால், என்னவோ அந்த கதாபாத்திரத்தைப் பின்தொடர முடியாத அளவுக்கு ஒட்டாமலே உள்ளது.

சில படங்களில், முக்கியப் பாத்திரம் தவறுகள் செய்தாலும், தார்மீகத்தின் அடிப்படையில் படம் பார்க்கும் ரசிகர்கள், அந்தக் கதாபாத்திரத்தின் பின்னணியில் இருப்பார்கள். காரணம், அதற்கான நோக்கங்கள், காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். 

இதில், கதிர் பெரிய குற்றங்கள் செய்தாலும், அதற்கான காரணங்கள் என்ன என்பது வெறும் வரிகளிலும் பாடலிலுமே வருகிறது. பிரச்னையின் வேரைத் தொடாமல்/விளக்காமல், நுனிப்புல்லை மட்டும் மேய்ந்ததுபோல இருந்தது கதிரின் கதாபாத்திரம். இதனாலயே, படத்தின் இரண்டாம் பாதி தொய்வாக உள்ளது.

காட்சியமைப்பும்கூட, நம்பும்படியாக இல்லாமல், அப்பட்டமாக திரைக்கதைக்கேற்ப வளைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. 

பொருட்செலவு மற்றும் நேரத்தைத் தாண்டி, எழுதிய விதத்திலேயே இது மிகச் சிறிய படம். இரண்டு கதாபாத்திரங்கள். இரண்டு கதாபாத்திரங்களுக்கான அடித்தளம். இரண்டு கதாபாத்திரங்களின் உலகம். கிளைமாக்ஸ். இவ்வளவுதான் படத்தின் திரைக்கதை என்று சொல்லும் அளவுக்கு மேம்போக்காக எழுதப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பெரிதளவில் சலிப்பூட்டும் வகையிலான படமாக இல்லாததாலும், முதல் பாதி படத்துக்காகவும் நானே வருவேன் படத்தை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com