ரசிகர்களைக் கவர்ந்ததா பபூன் திரைப்படம்? திரை விமர்சனம்

எதிர்பாராத விதமாக போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் அரசியல் ஆசை கொண்ட கதாநாயகன் அதிலிருந்து வெளிவந்தாரா இல்லையா என்பதே கதை.
ரசிகர்களைக் கவர்ந்ததா பபூன் திரைப்படம்? திரை விமர்சனம்

அரசியலில் நல்ல இடத்திற்கு வருவதற்காக தனது பூர்வ தொழிலான நாடகம் போடுவதிலிருந்து வெளியேறும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் தப்பிக்கிறாரா? என்ன ஆனார் என்பது பபூன் திரைப்படத்தின் கதை.

இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் வைபவ், அனகா, ஆந்தக்குடி இளையராஜா, ஜோ.ஜோ.ஜார்ஜ், ஆடுகளம் ஜெயபாலன், நரேன் என பலர் நடித்துள்ளனர். அசோக் வீரப்பன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

தனது தந்தையுடன் இணைந்து கோவில் விழாக்களில் நாடகம் நடத்தி வருகிறார் கதாநாயகன் குமரன். நாளுக்குநாள் தொழில் நசிவடையவே அரசியலில் பெரிய ஆளாக விரும்பி அதற்காக பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்ல விரும்புகிறார். அதற்காக ஒரு கும்பலிடம் சேரும் குமரன் எதிர்பாராத விதமாக ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து வெளிவந்தாரா இல்லையா என்பதே பபூன் திரைப்படத்தின் கதை. 

நடிகர்கள் வைபவ், ஆந்தக்குடி இளையராஜா இருவரும் படம் முழுக்க வருகின்றனர். வைபவ், ஜார்ஜ், நரேன் என பலர் தங்களால் முடிந்த அளவிற்கு சரியான பங்களிப்பை வழங்கியுள்ளனர். திரைப்படத்தின் தொடக்கத்தில் வரும் “மடிச்சு வச்ச வெத்தல” பாடல் முணுமுணுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

அதனைத் தவிர்த்து வரும் பிற பாடல்கள் பெரிதாக பொருந்தவில்லை. படத்திற்கு மிகப்பெரும் உதவியை செய்துள்ளது வசனங்கள். “தண்டிக்கனும்னா மட்டும் உங்க சட்டத்துல இவ்வளவு செக்‌ஷன தேடுறீங்களே. எங்களுக்கு என்னென்ன உரிமை இருக்குன்னு உங்க சட்டம் சொல்லுதுன்னு தெரியுமா?”, “துரோகத்தால பல சாம்ராஜ்யங்களே அழிச்சிருக்கு. நாமெல்லாம் எம்மாத்திரம்?”, “காலையில போட்டோவ பாத்தா மதியம் மறந்துருவாங்கல்ல” போன்ற வசனங்கள் படத்திற்கு பலமாக உள்ளன. இடையிடையே வரும் அரசியல் உரையாடல்கள் நடப்பு அரசியலை கிண்டலடிக்கும் விதமாக அமைந்திருக்கின்றன. தமிழ்நாடு கடற்கரையோர நிலப்பரப்பை காட்சிப்படுத்த முயன்று ஓரளவு வெற்றி பெற்றுள்ளது படக்குழு. 

இவை ஒருபுறமிருக்க அடுத்தடுத்து வேகமாக நகரும் திரைக்கதை காட்சிகளை புரிந்து கொள்வதிலும், அவற்றை நினைவில் கொள்ளவும் நேரம் தரவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. நாடகக் கலைஞர்களின் சிரமங்கள், இலங்கை அகதிகள் நிலை, அரசியல் பழிவாங்கல்கள் என பலவற்றைக் குறித்தும் பேச விரும்பி எதையும் முழுமையாக பேச முடியாமல் தவித்திருக்கிறது பபூன்.

காவல்துறையால் தேடப்பட்டு வரும் கதாநாயகன் குமரன் ஒருபுறம் தலைமறைவாக இருக்க ஓடுகிறார். மறுபுறம் ஊர் அறிய மதுபானக் கடையில் அமர்ந்து மது அருந்துகிறார். கதாநாயகியைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என நினைத்து ஏற்படுத்தியதுபோல் இருக்கிறது அவரது கதாபாத்திரம். 

காவல்துறையால் சீண்டப்படும் அவரை காப்பாற்றுகிறார் நடிகர் வைபவ். பின்னாளில் அவருக்கு உதவ கதாநாயகி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நம்பும்படியாக இல்லை. இருவருக்குமிடையேயான காதல் காட்சிகள் செயற்கையாக இருப்பதாக உள்ளது. பல நல்ல செய்திகளை கடத்த முயன்ற இயக்குநர் அதற்காக மேலும் தனது உழைப்பை திரைக்கதையில் செலுத்தியிருக்கலாம்.

எனினும் பரந்த கதைக்களத்தில் தனக்கான ஓட்டத்தை முயன்றிருக்கிறது பபூன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com