வேலு நாயக்கர், பாட்ஷா பாய் வரிசையில் நிற்பாரா முத்து பாய்? - வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்

தமிழ்நாட்டின் தென்கோடியில் விளிம்பு நிலையிலுள்ள ஓர் இளைஞனை, மும்பையிலுள்ள சூழல்கள் எங்கு கொண்டுபோய் நிறுத்துகின்றன? - இதுதான் வெந்து தணிந்தது காடு.
வேலு நாயக்கர், பாட்ஷா பாய் வரிசையில் நிற்பாரா முத்து பாய்? - வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்


தமிழ்நாட்டின் தென்கோடியில் விளிம்பு நிலையிலுள்ள ஓர் இளைஞனை, மும்பையிலுள்ள சூழல்கள் எங்கு கொண்டுபோய் நிறுத்துகின்றன?  இந்தக்  கதையை இயக்குநர் கௌதம் எந்தளவுக்கு ரசிகர்களின்  பொறுமையைச் சோதித்துக் காட்டியிருக்கிறார் என்பதே வெந்து தணிந்தது காடு.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடாவுக்குப் பிறகு கௌதம், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சித்தி இத்னானி, ராதிகா  சரத்குமார், பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை - ஜெயமோகன்.

ஏற்கெனவே சொன்னதுபோல தமிழ்நாட்டின் தென்கோடி கிராமத்தில் தந்தையை இழந்த முத்துவீரன் (சிம்பு), தாய் (ராதிகா சரத்குமார்), தங்கையுடன் ஏழ்மையில் வாழ்ந்து வருகிறான். அங்கு ஏற்படும் சிறிய பிரச்னை காரணமாக, முத்துவின் ஜாதகத்திற்குப் பயந்து, உறவினர் (பவா செல்லதுரை) மூலமாக மகனை மும்பைக்கு அனுப்புகிறார் முத்துவின் தாய் ராதிகா சரத்குமார்.

பிழைப்பதற்காக மும்பை சென்ற முத்துவை சந்தர்ப்ப சூழ்நிலைகள், எங்கு கொண்டு நிறுத்தின என்பதுதான் வெந்து தணிந்தது காடு.

மும்பை சென்றவுடன் முத்துவின் உடல்மொழி நாளுக்கு நாள் மாற்றம் அடைவதை, சிம்பு மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதி முழுவதையும் தன் முதுகில் சுமந்து சென்றிருக்கிறார் சிம்பு. சிம்புவுக்கு நிகராக முதல் பாதியில் அதிகம் பங்காற்றியது ஏ.ஆர். ரஹ்மான்தான். 

ஒரு தனி நபரின் வாழ்கையைக் காட்டி வருவதால், படத்தில் பெரிதளவில் விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெறாது. இதனால், பெரும்பாலான காட்சிகள் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலமாகவே மிதந்து நகர்கிறது. இந்த இடத்தில் இயக்குநர் வழக்கத்துக்கு மாறாக வாய்ஸ் ஓவரைத் தவிர்த்தது சற்று பலம் என்றே தோன்றுகிறது. பாவையாக வரும் சித்தி இத்னானிக்கு முதல் பாதியில் பெரியளவில் காட்சிகள் இல்லை. இதுவும் கௌதம் படத்தின் வழக்கத்துக்கு மாறானது.

பரபரப்பாக இல்லாமல் நிதானமாகச் சென்றாலும், ஆங்காங்கே வரும் சில சிறிய வசனங்களும், காட்சிகளும் நம்மைப் பெரிதளவில் சோர்வடையச்  செய்யாமல், முத்து மற்றும் அவனைச் சுற்றியுள்ளவர்களின் உலகை நமக்கு மிகச் சரியாகக் கடத்துகின்றன.

இந்த நிதானம் ஒருவழியாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து உச்சமடையும் இன்டர்வெல் பிளாக்தான் படத்தின் வெயிட்டான தருணம். இது செம சூப்பராக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் துப்பாக்கியைக் கையிலெடுக்கும் சிம்பு இந்த இடத்தில் மிரட்டியிருக்கிறார். சிம்பு ரசிகர்கள் பரவசமடையும் இடமாக இது இருக்கும் என்றால் மிகையாகாது. அதேசமயம், பின்னணி இசையில் ரஹ்மானும், கேமிராவில் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தும் இந்தக் காட்சி சிறப்பாக வருவதற்குப் பெரும் உழைப்பைப் போட்டிருக்கிறார்கள்.

முதல் பாதியில் பல இடங்களில் கேமிரா சிங்கிள் ஷாட்டாகவும், சற்று கேன்டிட்டாகவும் (Candid) இருந்தது, இந்தக் கதை விவரிப்பு முறைக்குப் பெரிதும் உதவியது என்றே சொல்லலாம்.

நிதானம் கடந்து, முதல் பாதி இறுதியில் விறுவிறுப்பைத் தொட்ட காடு,  இரண்டாம் பாதியில் தீயாக இருக்கப்போகிறது என்றால், ஏமாற்றமே. முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி தனது நிதானத்தை மேலும்  குறைத்துக்கொண்டு வெறுமனே புகைகிறது.

கதாநாயகி வரும் காட்சிகள் படத்துடன் சேராமல் தனித்துத் தெரிகின்றன. கௌதம் படத்தில் இப்படி அமைந்திருப்பது ஆச்சரியம். சந்தர்ப்ப சூழ்நிலையால் அடுத்த கட்டத்துக்கு உயர்ந்துள்ள முத்துவைப் பின்தொடர முடிகிறது என்றாலும், திரைக்கதை எவ்வித ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாததால் ஒரே மாதிரியாக நகர்கிறது. 

படம் வெளிவருவதற்கு முன்பு இயக்குநர் கௌதம் அளித்த சில நேர்காணலைப் பார்த்தால், ஏற்றம் இறக்கம் இல்லாமல் செல்வது அவரே விரும்பி தேர்ந்தெடுத்ததைப்போலத்தான் தெரிகிறது. காரணம், ஒரு கூட்டத்துக்கு தலைவன் எப்படி ஆகிறான் என்பதைக் காட்டினால் அதில் பெரும் சுவாரஸ்யம் இருக்கும். ஆனால், கூட்டத்திலுள்ள ஒரு கையாள் எப்படி கையாளப்படுகிறான், அவனது வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பதைக் காட்டவே கௌதம் மெனக்கெட்டிருக்கிறார்.

இதனால், முத்து இந்த உலகிலிருந்து வெளியேற / விலக நினைக்கும்போதெல்லாம் சந்தர்ப்ப சூழல் அவனை எப்படித் தடுத்து நிறுத்தி, வேறு ஓர் இடத்துக்கு எடுத்துச் செல்கிறது என்பது மட்டுமே திரைக்கதையின் நோக்கமாக அமைந்திருக்கிறது. நோக்கம் வெற்றி கண்டிருந்தாலும், ஒரு முழுப் படமாகப் பார்க்கும்போது சோர்வைத் தருகிறது எனச் சொல்லலாம்.

ஒருவேளை படத்தின் இரண்டாம் பாகத்தில் (வெளிவரும்பட்சத்தில்) முத்து தலைவன் ஆனதை இயக்குநர் ஆழமாக விவரிக்கக் கூடும். ஆனால், ஒரு படம் முழுக்க, ஏற்றம், இறக்கம் எதுவும் இல்லாமல், கதைக்களத்தினை ஆழமாகப் பதிவு செய்யாமல் திரைக்கதையை நகர்த்திச் செல்வது நிச்சயம் பரிசோதனை முயற்சிதான். உதாரணத்திற்கு மும்பையில் சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு கேங்க்ஸ்டர்களுக்கும் மேல் உள்ள அந்த கேங்ஸ்டர் யார், அவர்களது தொழில், நோக்கம் எல்லாம் என்ன? என்பவை தெளிவாக விளக்கப்படாமலே நகர்வதால், சிக்கலாகத் தெரிகிறது. அவர்களது வீரியம் புரிந்தால் மட்டுமே, முத்துவின் செய்யும் சாகசங்களின் வீரியம் நம்முள் தாக்கத்தினை உண்டாக்கும். இந்தப் படத்தில் அது தவறுகிறது.

ஒரு விளிம்புநிலை மனிதன் எப்படி டானாக மாறுகிறான் என்பதைக் காட்டுவதற்கு முன்பு, அந்த உலகுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். ரசிகர்களை அதற்கு தயார்படுத்துவதற்கு சற்று நேரம் எடுக்கும். அப்படியான நேரமாகத்தான் படத்தின் முதல் பாதி இருந்திருக்கிறதுபோல என முதல் பாதியின் முடிவில் நினைத்தால், மொத்த படமே நம்மை தயார் மட்டும்தான் படுத்திக்கொண்டுதான் இருந்திருக்கிறது என்பது படத்தின் முடிவில் தெரிகிறது. ஒருவேளை வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்துக்கு  தயார்படுத்தத்தான் இந்த முதல் பாகமோ?

மற்றபடி, கேங்க்ஸ்டராக உருவாகும் கதை என்பதால், இதே பாணியில் நாம் பார்த்த புதுப்பேட்டை, கே.ஜி.எஃப். போன்ற படங்களின் காட்சிகளும்,  வசனங்களும் நம் கண்முன் வரலாம். ஆனால், மற்ற படங்களைப்போல் அல்லாமல், இந்தப் படத்தில் கதை விவரிப்பை ஒரு பரிசோதனை முயற்சியாக மிகத் தைரியாகக் கையாண்டிருக்கிறார் கௌதம்.

கதையைக் கௌதம் கையாளும் இந்த அனுபவத்தைப்  பெறுவதற்காகவும் சிம்புவுக்காகவும் வெந்து தணிந்தது காடு.. படத்துக்கு ஒரு  டிக்கெட்ட போடு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com