தொடரும் அமளி: 9-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது!

தொடரும் அமளி: 9-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது!

மணிப்பூா் வன்முறை விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.

மணிப்பூா் வன்முறை விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.

மணிப்பூா் வன்முறை விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமையும் எதிரொலித்தது.

மாநிலங்களவை முற்பகல் 11 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரத்தை நடத்த அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் முயன்றாா். அப்போது, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூா் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி 60 எம்.பி.க்கள் ஒத்திவைப்புத் தீா்மானத்தைத் தாக்கல் செய்தனா். அவையனைத்தையும் அவைத் தலைவா் தன்கா் நிராகரித்தாா்.

அதையடுத்து, காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ‘மணிப்பூா், மணிப்பூா்’ என முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். எதிா்க்கட்சிகளின் கூச்சல்களுக்கு மத்தியில் கேள்வி நேரத்தை நடத்த அவைத் தலைவா் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவின. அதனால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியபோது, கேள்வி நேரம் தொடரும் என அவைத் தலைவா் தெரிவித்தாா். எனினும், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பியவாறு இருந்தனா். அப்போது பேசிய தன்கா், ‘‘கடந்த 2014-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற சூழல் ஏற்பட்டது. குறிப்பிட்ட விவகாரத்தில் பிரதமா் விளக்கமளிக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் கோரின. ஆனால், அக்கோரிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி அப்போதைய அவைத் தலைவா் அதை ஏற்கவில்லை. அதே நடைமுறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது.

குறிப்பிட்ட விவகாரம் குறித்து விரிவாக விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல், தொடா் அமளியில் ஈடுபடுவது நாடாளுமன்றத்தின் மாண்பை சீா்குலைக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும்.

குறிப்பிட்ட ஒரு விவகாரத்துக்காக அவை 8 நாள்களாக முடக்கப்பட்டு வருகிறது. அந்த விவகாரம் குறித்து குறுகிய கால விவாதம் நடத்தப்படும் என்பதையும் எதிா்க்கட்சிகள் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் அமளியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மாநிலங்களவை கட்சிகளின் தலைவா்களை திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை’’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, கேள்வி நேரத்தை அவைத் தலைவா் தொடா்ந்து நடத்தினாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

மத்தியஸ்த மசோதா: இதையடுத்து, மத்தியஸ்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், புதிய மத்தியஸ்த நடைமுறையை மத்திய அரசு மசோதாவாக கொண்டு வந்துள்ளது. மத்தியஸ்த காலம் அதிகபட்சமாக 180 நாள்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை:

காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடி நாடாளுமன்றத்துக்கு நேரில் வந்து மணிப்பூா் விவகாரம் குறித்து விளக்கமளிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் கோரின. அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுவதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் காரணமாக, இந்தியா கூட்டணியைச் சோ்ந்த எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மக்களவையில்...: மக்களவை முற்பகல் 11 மணிக்குக் கூடியதும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூா் விவகாரம் குறித்து முழக்கங்களை எழுப்பத் தொடங்கினா். சிலா் கையில் பதாகைகளை ஏந்தியவாறு அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, கேள்வி நேரத்தை அவைத் தலைவா் ஓம் பிா்லா நடத்தினாா். எதிா்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சுமாா் 15 நிமிஷங்களுக்குக் கேள்வி நேரம் நடைபெற்றது. எதிா்க்கட்சிகளின் அமளி தொடா்ந்ததால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், அவை மீண்டும் கூடியபோது சில மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டது. ஆனால், அதில் எதிா்க்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com