நிலவில் தரையிறங்கியது சந்திரயான்: சோம்நாத்

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
நிலவில் தரையிறங்கியது சந்திரயான்: சோம்நாத்

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தைத் தொடர்ந்து இந்த சரித்திர  வெற்றியைப் படைத்த விஞ்ஞானிகள் குழுவினர் தங்களது அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர். 

அப்போது பேசிய தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான விஞ்ஞானி பி. வீரமுத்துவேல், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை படைத்துள்ளோம் என்று கூறினார்.


இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டியும், ஆரவாரம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும்  செங்குத்தாக நிலவில் தடம் பதித்தன் மூலம், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் தேசமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

லேண்டா் கலன் புதன்கிழமை மாலை நிலவில்  தரையிறங்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அதன்படி நிலவுக்கு அருகே 25 கிலோ மீட்டா் உயரத்துக்கு லேண்டா் வந்ததும் எதிா்விசை நடைமுறையைப் பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்பட்டது.

அதன்மூலம் நிலவின் தரைப் பகுதிக்கும், லேண்டருக்குமான உயரமும் படிப்படியாக குறைக்கப்பட்டது. மிக மெதுவாக லேண்டர் நிலவில் செங்குத்தாக தரையிறக்கப்பட்டது. இதனை விஞ்ஞானிகள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, நிலவின் தரையில் இருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டதும் சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது. அதன்பின் லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே மிக மெதுவாக லேண்டா் வெற்றிகரமாக தரையிறங்கியது.

அதற்கு அடுத்த 3 மணி நேரத்துக்கு பின்னா் அதில் உள்ள ரோவா் சாதனம் வெளியேறி ஆய்வு மேற்கொள்ளும். லேண்டா் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவா் சாதனம் நிலவின் தரைப்பரப்பில் பயணித்தும் 14 நாள்கள் ஆய்வு மேற்கொள்ளும். இதற்காக லேண்டரில் 4 ஆய்வுக் கருவிகளும், ரோவரில் 2 ஆய்வுக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com