சந்திரயான்-3 வெற்றி: வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

இந்தியாவின் விண்வெளித் திட்டம் எப்போதும் உலகளாவிய நல்வாழ்வை மேம்படுத்த முடிந்ததைச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 வெற்றி: வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

புது தில்லி: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு உலகத் தலைவா்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நன்றி தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, சந்திரயான்-3 வெற்றிக்குக்கும், அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் வரலாற்றுச் சாதனை படைத்ததற்கும் இந்திய பிரதமா் மோடி மற்றும் இஸ்ரோ அணிக்கு வாழ்த்துகள்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் ஜேம்ஸ் கிளெவா்லி வெளியிட்ட பதிவு: சந்திரயான்-3-இன் வெற்றி வரலாற்றுத் தருணமாகும். இது இந்திய மக்களின் அசாதாரணமான சாதனை என்று தெரிவித்திருந்தார்.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா ஷாஹித், நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை எண்ணி தெற்காசிய நாடாகவும், இந்தியாவின் அண்டை நாடாகவும் மாலத்தீவு பெருமிதம் கொள்கிறது என்று தெரிவித்திருந்தார்.

ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) பிரதமா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ‘எக்ஸ்’ (ட்விட்டா்) வலைதளத்தில், நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இந்தியாவில் உள்ள எனது நண்பா்களுக்கு வாழ்த்துகள். விடாமுயற்சியின் மூலம் தேசங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இந்தியா தொடா்ந்து வரலாறு படைத்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

ஐக்கிய அரபு அமீரக தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வாழ்த்து: “இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலத்தின் வெற்றிகரமான தரையிறக்கம் கூட்டு அறிவியல் முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் குறிக்கிறது. மனித குல சேவையில் இந்த வரலாற்று சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வாழ்த்து: “இந்தியாவின் சாதனை மனிதகுலத்திற்கு புதிய எல்லைகளைத் திறக்கிறது. இந்த பணி அறிவியலின் சக்தி மற்றும் அறிவியல் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக நமக்கு வழங்கும் சிறந்த வாய்ப்புகளுக்கு மற்றொரு சான்றாகும். வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார். 

மடகாஸ்கர்  அதிபர் வாழ்த்து: “இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமான தரையிறக்கம் செய்து ஒரு வரலாற்று சாதனைய செய்திருக்கிறது! இதுபோன்ற நம்பமுடியாத மற்றும் முன்மாதிரியான சாதனைக்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல் மற்றும் பெருமையான தருணம். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா உண்மையான முன்னோடியாக மாறியுள்ளது. இந்த இந்திய வெற்றி உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும். இந்த வெற்றி மனிதகுலம் அனைவருக்கும் சொந்தமானது, உங்களின் (நரேந்திர மோடி) ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் தலைமைத்துவத்திற்கும் நன்றி.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு உலகத் தலைவா்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது பதிலில், “சந்திரயான்-3 சாதனைக்கு வாழ்த்து, பாராட்டு தெரிவித்த உலகத் தலைவர்கள் அனைவருக்கும்  நன்றி. இந்தியாவின் விண்வெளித் திட்டம் எப்போதும் உலகளாவிய நல்வாழ்வை மேம்படுத்த முடிந்ததைச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மோடியின் சில பதிவுகள்...

ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) பிரதமா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “இந்த மைல்கல் இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, மனித முயற்சி மற்றும் விடாமுயற்சியின் கலங்கரை விளக்கமாகும். அறிவியல் மற்றும் விண்வெளியில் நமது முயற்சிகள் அனைவருக்கும் ஒளிமயமான நாளை வழி வகுக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உர்சுலா வான் டெர் லேயனின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “ வாழ்த்துகளுக்கும், அருமையான வார்த்தைகளுக்கு vonderleyen நன்றி. அனைத்து மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக இந்தியா தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும், கற்றுக் கொள்ளும் மற்றும் பகிர்ந்து கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வாழ்த்துகளுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “உண்மையில், அறிவியலின் சக்தி மூலம், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. வாழ்த்துகளுக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

மடகாஸ்கர்  அதிபருக்கு அளித்துள்ள பதிலில்,  “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. விண்வெளியில் இந்தியாவின் முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு உண்மையிலேயே பயனளிக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இது இந்தியாவை உருவெடுத்துள்ளது, நிலவின் தென்பகுதியைத் தொட்ட முதல் நாடாக இந்தியா சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com