அமர்மணி திரிபாதி
அமர்மணி திரிபாதி

பெண் கவிஞர் கொலை: ஆயுள் கைதிகளான உ.பி. முன்னாள் அமைச்சர், மனைவி விடுதலையாகின்றனர்!

பெண் கவிஞர் மதுமிதா சுக்லா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளான அமர்மணி திரிபாதி மற்றும் அவரது மனைவி விடுதலை செய்யப்படுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளது. 

பெண் கவிஞர் மதுமிதா சுக்லா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளான உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி மற்றும் அவரது மனைவி விடுதலை செய்யப்படுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. 

கடந்த 2003 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் நிஷாத்கஞ்ச் பகுதியில் வசித்துவந்த பெண் கவிஞர் மதுமிதா(24) சுக்லா தன் குடியிருப்பில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. 

விசாரணையில் உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. அமர்மணி திரிபாதி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். முலாயம் சிங் யாதவ் அமைச்சரவையிலும் இருந்துள்ளார். 

மதுமிதா சுக்லா
மதுமிதா சுக்லா

மதுமிதா சுக்லா, அமர்மணி திரிபாதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். மதுமிதா இறந்தபிறகு நடந்த டிஎன்ஏ சோதனையில் அவர் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததும் அந்த குழந்தைக்கு அமர்மணி திரிபாதிதான் தந்தை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் இந்த வழக்கில் அமர்மணி திரிபாதி, அவரது மனைவி மதுமணி திரிபாதி, ரோஹித் சதுர்வேதி, சந்தோஷ் குமார் ராய் ஆகிய நால்வருக்கும் 2007ல் டேராடூன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உத்தரகண்ட் உயர்நீதிமன்றமும் டேராடூன் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. 

எனினும் அமர்மணி திரிபாதியும் அவரது மனைவியும் பெரும்பாலான நாள்கள்  பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில்தான் இருந்துள்ளனர். தற்போதும் கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நன்னடத்தை அடிப்படையில் அமர்மணி திரிபாதி மற்றும் அவரது மனைவி மதுமணி திரிபாதி ஆகிய இருவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

மதுமிதா சுக்லாவின் சகோதரி, உத்தர பிரதேச அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரையும் விடுதலை செய்ய தடையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று கூறியதுடன் இதுகுறித்து 8 வாரங்களில் பதில் அளிக்க உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

மதுமிதா சுக்லா வழக்கு கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் மிகவும் பேசப்பட்ட ஒரு வழக்கு. குற்றவாளிகளின் குற்றம் சிபிஐ விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுமிதாவின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் வந்துகொண்டிருப்பதாக மதுமிதாவின் சகோதரி ஏற்கெனவே கூறியுள்ளார். 

ஒரு கர்ப்பிணி பெண்ணை சதித் திட்டம் தீட்டிக் கொலை செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவர் இப்போது நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். 

முன்னதாக, நாட்டையே உலுக்கிய குஜராத் வன்முறையின்போது பிஸ்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com