
விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் இறங்குவதற்கு முன் சூரியனை நோக்கி ரோவரின் சூரியசக்தி மின் தகடு திரும்பியதன் காணொலியை இஸ்ரோ வெளியிட்டது.
ரோவர் இயக்குவதற்கு தேவையான மின்சார சக்தியைப் பெற சூரியசக்தி மின்தகடு சூரியனை நோக்கி திரும்பியது.
சந்திரயான் - 3 லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் 8 மீட்டர் தூரத்துக்கு பயணித்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
ரோவரில் உள்ள இரு அறிவியல் ஆய்வு கருவிகளான LIBS மற்றும் APXS ஆகிய கருவிகள் செயல்படத் தொடங்கியதாகவும், அனைத்து அறிவியல் ஆய்வுக் கருவிகளும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியதாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
லேண்டர், உந்துவிசைக்கலன், ரோவர் ஆகியவை திட்டமிட்டப்படி சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து இஸ்ரோ தகவலை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.