அனைத்து கட்சி கூட்டத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்திய பகுஜன் சமாஜ் கட்சி

அனைத்து கட்சி கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்திய பகுஜன் சமாஜ் கட்சி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக சனிக்கிழமை கூட்டப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேசிய அளவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

பகுஜன் சமாஜ் கட்சி இதில் பங்கேற்று நாடு முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தியது.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நேர்மறையான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். மாநில அரசுகள் இக்கணக்கெடுப்பை நடத்தி மக்களை திருப்திபடுத்த முயன்றாலும், மத்திய அரசு முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் சரியாக இருக்கும்.

தேசிய அளவில் அனைத்து மக்களுக்கும் உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த மக்களின் தொடர் கோரிக்கைகள் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தூக்கமற்ற இரவுகளை அளித்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. அதில் மாநிலத்தில் 63 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்பது தெரியவந்தது. அதனையடுத்து அம்மாநில இடஒதுக்கீடு மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com