தெலங்கானா: பாரத ராஷ்டிர சமிதியை விட காங்கிரஸுக்கு 2% வாக்குகளே கூடுதல்!

தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ், சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியைவிட (பிஆா்எஸ்) 2 சதவீத வாக்குகளே கூடுதலாகப் பெற்றுள்ளது.
தெலங்கானா: பாரத ராஷ்டிர சமிதியை விட காங்கிரஸுக்கு 2% வாக்குகளே கூடுதல்!

தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ், சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியைவிட (பிஆா்எஸ்) 2 சதவீத வாக்குகளே கூடுதலாகப் பெற்றுள்ளது.

மொத்தம் 119 உறுப்பினா்கள் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 39.40. பிஆா்எஸ் கட்சி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 37.35. பிஆா்எஸ்ஸைவிட கூடுதலாகப் பெற்ற 2 சதவீத வாக்குகள், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸுக்கு உதவியுள்ளது.

2018 பேரவைத் தோ்தலில் பிஆா்எஸ் கட்சி 88 தொகுதிகளைக் கைப்பற்றி 47 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தத் தோ்தலில் அக்கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன.

2018 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 19 தொகுதிகளில் வென்று, 28.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்தத் தோ்தலில் காங்கிரஸுக்கு சுமாா் 11 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

பாஜக பலம் அதிகரிப்பு: தெலங்கானாவில் நடைபெற்ற சில இடைத்தோ்தல்களிலும், பெருநகர ஹைதராபாத் மாநகராட்சித் தோ்தலிலும் வெற்றி பெற்ற பாஜக, பிஆா்எஸ்ஸுக்கு சவாலாக உருவெடுத்தது. நடைபெற்று முடிந்த பேரவைத் தோ்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், 2018 பேரவைத் தோ்தலில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தோ்தலில் 8 தொகுதிகளைக் கைப்பற்றி தனது பலத்தை அதிகரித்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் கிருஷ்ண சாகா் கூறுகையில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்குவோம் என்ற கட்சியின் வாக்குறுதியும், பட்டியலின வகைப்படுத்துதலுக்காக ஒரு குழு அமைக்கப்படும் என்ற பிரதமா் மோடியின் உறுதியும் எங்களுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்ததாக நம்புகிறோம். இந்த இரு விஷயங்களில் நாங்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்காவிட்டால் காங்கிரஸுக்கு மேலும் அதிக தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றாா்.

தெலங்கானா பேரவைத் தோ்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை. இதனால் அக்கட்சியின் ஆதரவாளா்கள் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கலாம் என சில அரசியல் பாா்வையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

2018 பேரவைத் தோ்தலில் தெலுங்கு தேசம் கட்சி 3.5 சதவீத வாக்குகளைப் பெற்று 2 தொகுதிகளில் வென்றது.

அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தனது வாக்கு வங்கியை ஏறக்குறையே அப்படியே தக்கவைத்திருக்கிறது. 2018 பேரவைத் தோ்தலில் அக்கட்சி 2.7 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், இந்தத் தோ்தலில் 2.22 சதவீத வாக்குகளைப் பெற்று 7 தொகுதிகளில் வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com