
பெங்களூரு : தேர்தலின்போது இலவசங்கள் வழங்கப்படுமென அரசியல் கட்சிகள் வாக்குறுதியளிப்பதை எதிர்த்து, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சிலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகத்தை சேர்ந்த ரவி முனிசாமி, ரமேஷ் ஜகதாபி, நாயக் மணிகந்தா மற்றும் பசப்பா டவுனஷெட்டி ஆகிய நான்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தேர்தலின்போதும், தேர்தலுக்கு பின்னும், இலவசங்கள் வழங்குவதன் மூலமும், அதேபோல, ஆட்சிக்கு வந்ததும் இலவசங்கள் வழங்கப்படுமென அறிவிப்பதன் மூலமும், அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான களத்தை உருவாக்கி வருகின்றன.இது, மக்கள் பிதிநிதித்துவ சட்டத்தின்படி, வாக்குக்கு பணம் வழங்கப்படுவதை போன்ற நடவடிக்கையாகும்.
இதன்மூலம், அரசியல் கட்சிகளால் இலவசங்கள் வழங்கப்படுமென அளிக்கப்படும் வாக்குறுதிகள், சட்டத்திற்கு எதிரானது, இந்திய அரசமைப்புக்கும் எதிரானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இலவசங்களால், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடப்பதை எதிர்பார்க்க முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய அரசியல் கட்சிகளும் இந்த மனுவில் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.