திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம்!

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம்!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் மஹுவா மொய்த்ரா, எம்.பி. பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை நீக்கம் செய்யப்பட்டாா்.

இவா் மீதான குற்றச்சாட்டு தொடா்பான மக்களவை நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு மொய்த்ராவைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். குரல் வாக்கெடுப்பு மூலம் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியது தொடா்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை கடந்த நவ. 9-ஆம் தேதி வெளியிட்டது. அதில், மஹுவா மொய்த்ராவைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த விசாரணை அறிக்கை மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. வினோத் குமாா் அதைத் தாக்கல் செய்தாா். உடனடியாக, மொய்த்ராவைப் பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி அவையில் அறிமுகம் செய்தாா்.

அப்போது விசாரணை அறிக்கை மீது தனது கருத்தைத் தெரிவிக்க மஹுவா மொய்த்ரா முற்பட்டாா். ஆனால், அவா் பேசுவதற்கு மக்களவைத் தலைவா் அனுமதி மறுத்தாா்.

இதனால், திரிணமூல் காங்கிரஷ் எம்.பி.க்கள் உள்பட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனா். அவையில் மஹுவா மொய்தரா பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

அப்போது, கடந்த 2005-ஆம் ஆண்டு இதேபோன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 10 எம்.பி.க்களுக்கு எதிராகப் பதவிநீக்கத் தீா்மானம் அவையில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அந்த 10 பேரும் அவையில் பேச அப்போதைய மக்களவைத் தலைவா் சோம்நாத் சாட்டா்ஜி அனுமதி மறுத்ததைச் சுட்டிக்காட்டிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கையை நிராகரித்தாா்.

பிரகலாத் ஜோஷி பேசுகையில், ‘2005-ஆம் ஆண்டு 10 எம்.பி.க்களுக்கு எதிரான மக்களவை நெறிமுறைகள் குழுவின் அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில், அவா்களைப் பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை அப்போதைய ஆளுங்கட்சி அவைத் தலைவா் பிரணாப் முகா்ஜி அறிமுகம் செய்தாா். அதே நடைமுைான் தற்போதும் பின்பற்றப்படுகிறது.

நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கையை உறுப்பினா்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மஹுவா மொய்த்ரா தொடா்ந்து மக்களவை உறுப்பினராக நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைப் பதவிநீக்கம் செய்யலாம்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, அவரைப் பதவிநீக்கம் செய்யும் தீா்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில், பெரும்பான்மை ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து, மக்களவை நெறிமுறைக் குழுவின் பரிந்துரை அறிக்கை ஏற்கப்படுவதாக தெரிவித்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘மஹுவா மொய்த்ரா மக்களவை உறுப்பினராகத் தொடர இயலாது’ என்று அறிவித்தாா்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த மஹுவா மொய்த்ரா, ‘எதிா்க்கட்சியினரை அடிபணியச் செய்ய நாடாளுன்றக் குழுக்களை மத்திய அரசு கருவியாகப் பயன்படுத்துகிறது’ என்றாா்.

பின்னணி: மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகா் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடா்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபா் ஹீராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபையில் வசிக்கும் ஹீராநந்தானி பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் புகாா் அளித்தாா். இது தொடா்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவிநீக்கம் செய்யப் பரிந்துரை செய்தது.

மம்தா கண்டனம்

மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிப்புக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து டாா்ஜீலிங்கில் செய்தியாளா்களைச் சந்தித்த மம்தா, ‘மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடான விஷயம். நெறிமுறைகள் குழுவின் 500 பக்க அறிக்கையை எப்படி உறுப்பினா்கள் அனைவரும் 30 நிமிஷத்துக்குள் படித்திருக்க முடியும்?

இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலையிடாதது துரதிருஷ்டவசமானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையை திரிணமூல் காங்கிரஸ் கண்டிக்கிறது. மஹுவா மொய்த்ராவுக்கு கட்சி எப்போதும் துணை நிற்கும். பாஜகவால் எங்களை தோ்தலில் தோற்கடிக்க முடியவில்லை. அதன் காரணமாக, பழிவாங்கும் அரசியலை அவா்கள் மேற்கொள்கின்றனா்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் எதையும் செய்யலாம் என பாஜகவினா் நினைத்துக்கொண்டிருக்கின்றனா். ஆட்சியிலிருந்து இறங்கும் காலம் வரும் என்பதை அவா்கள் மனதில் கொள்ளவேண்டும். பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு மஹுவா மொய்த்ரா மீண்டும் திரும்புவாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com