மதுபான ஆலையில் சிக்கிய ரூ.250 கோடி: மோடி விமர்சனம்!

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருக்குச் சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுபான ஆலையில் சிக்கிய ரூ.250 கோடி: மோடி விமர்சனம்!

புவனேஷ்வர்: ஒடிசாவின் மது ஆலை மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வருமான வரித்துறையின் சோதனையில் ரூ.250 கோடி வரையிலான கணக்கில் வராத பணம் கிடைக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெளத் டிஸ்டிலரி என்கிற நிறுவனத்தில் புதன்கிழமை சோதனை தொடங்கப்பட்டது. அங்கு சிக்கிய பணம் இன்னமும் எண்ணப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இதுவரை ரூ.200 கோடி கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.250 கோடி வரை பணம் இருக்கலாம் என அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.

முப்பது பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட போதும் பணம் எண்ணும் வேலை மெதுவாகவே நடந்து வருகிறது.

ஜார்க்கண்ட் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பாண்டே சாஹுவிற்கு சொந்தமான இந்த நிறுவனங்களில் பணம் கையகப்படுத்தப்பட்ட செய்தியைப் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “நாட்டு மக்கள் இதனை பார்க்க வேண்டும், நேர்மையின் முகமாக இருக்கும் இந்தத் தலைவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். மக்களிடம் இருந்த திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும்,. இது மோடியின் வாக்குறுதி” எனப் பதிவிட்டுள்ளார்.

ரூ.200 கோடி மதிப்புள்ள பணம், பாலங்கீர் மாவட்டத்தில் உள்ள மதுபான ஆலையின் அலமாரிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீதம் பல்வேறு இடங்களில் சோதனை நடந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் கிடைத்துள்ளது.

இது குறித்து சாஹு தரப்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை. மதுபான விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெரியளவிலான பணப் பரிமாற்றும் நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com