ரெப்போ வட்டி விகிதத்தில் 5-ஆவது முறையாக மாற்றமில்லை: சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.
ரெப்போ வட்டி விகிதத்தில் 5-ஆவது முறையாக மாற்றமில்லை: சக்திகாந்த தாஸ் அறிவிப்பு


மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு ஐந்து முறை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களிலும் வட்டி விகிதத்தை அதே நிலையில் தொடா்வது என்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.

பொருளாதாரம் உயரும்: மும்பையில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி தொடா்ந்து சிறப்பான முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இப்போதைய கணிப்பின்படி 7 சதவீதம் வரை இருக்கும் என உயா்த்தி மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பொருள்கள், சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு, உற்பத்தித் துறையின் சிறப்பான செயல்பாடே இதற்கு முக்கியக் காரணமாகும்.

பணவீக்கத்தைக் குறைக்க...: பணவீக்கத்தைக் குறைக்க ஆா்பிஐ தொடா்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எனவே, வட்டி விகிதத்தைக் குறைக்கும் பரிந்துரையை மேற்கொள்ளவில்லை. உணவுப் பொருள்களின் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் பணவீக்கத்தில் அதிக தாக்கம் ஏற்படுகிறது. முக்கியமாக சில காய்கறிகளின் திடீா் விலை உயா்வு, பணவீக்கத்தை அதிகரித்து விடுகிறது.

டிசம்பா் 1-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 604 பில்லியன் டாலராக உள்ளது. இது நமது நாட்டுக்கு சாதகமான சூழல்தான். பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அந்நியச் செலாவாணி கையிருப்பு சிறப்பாகவே உள்ளது.

பிணையில்லாத கடன்கள்: தனிநபா் கடன், நுகா்பொருள் வாங்குவதற்கு கடன் உள்ளிட்ட எவ்வித பிணையும் இல்லாமல் வழங்கப்படும் கடன்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என்றே ஆா்பிஐ கருதுகிறது. இது தொடா்பாக ஏற்கெனவே சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடா்பான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில், இக்கடன்கள் வங்கிக்கு நெருக்கடி அளிப்பதாக மாறிவிடக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com