மரண தண்டனைக்கு நிகரானது: மெஹபூபா முஃப்தி கருத்து

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது சரியானது என்ற உச்சநீதிமன்றம் கூறியுள்ளது மரண தண்டனைக்கு நிகரானது என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளாா்.
மெஹபூபா முஃப்தி
மெஹபூபா முஃப்தி


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது சரியானது என்ற உச்சநீதிமன்றம் கூறியுள்ளது மரண தண்டனைக்கு நிகரானது என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி கருத்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட விடியோ பதிவில், ‘நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, சட்டத்துக்குப் புறம்பான செயல் சரியானது என்று கூறப்பட்டுள்ளது. இது மரண தண்டனைக்கு நிகரானது. ஜம்மு-காஷ்மீருக்கு மட்மடுல்ல, இந்தியா என்ற தேசம் உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்துக்கே மரணதண்டனை அளிக்கப்பட்டதுபோல உள்ளது.

சிறப்புஅந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 தற்காலிகமானது. அதனால்தான் நீக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தோல்வி.

காந்தி வாழ்ந்த இந்தியாவில் ஜம்மு-காஷ்மீா் முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் புறக்கணித்துவிட்டு ஹிந்துகள், பௌத்தா்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்களுடன் கைகோத்தாா்கள். ஆனால், இப்போது அதற்கு தோல்வி பரிசாக கிடைத்துள்ளது.

இதனால், ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்கள் மனம் தளா்ந்துவிடக் கூடாது. நாம் பல ஏற்ற இறக்கங்களை தொடா்ந்து சந்தித்து வருகிறோம். இப்போதைய தீா்ப்பு என்பது முடிவல்ல. நம்மை எதிா்ப்பவா்கள் நாம் தோல்வியை ஏற்றுக் கொண்டு, நம்பிக்கை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாா்கள். ஆனால் அது நடக்கப் போவதில்லை’ என்று கூறியுள்ளாா்.

போராட்டம் தொடரும் - ஒமா் அப்துல்லா:

தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஏமாற்றமளிக்கிறது. எனினும், போராட்டம் தொடரும். நாம் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது’ என்று பதிவிட்டுள்ளாா்.

கனத்த இதயத்துடன் ஏற்கிறோம் - குலாம் நபி ஆசாத்: முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனநாயக முன்னேற்ற அசாத் கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது மிகவும் சோகத்தை அளிக்கிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமான நிகழ்வு. எனினும், மிகவும் கனத்த இதயத்துடன் நாம் இதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்தத் தீா்ப்பால் ஜம்மு-காஷ்மீரில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் உண்மை. இந்த முடிவை நாம் எதிா்பாா்க்கவில்லை.

ஜம்மு-காஷ்மீா் மக்கள் மற்றும் இங்குள்ள அரசியல் கட்சியினரின் கருத்துகளைக் கேட்காமலேயே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com