'உள்துறை அமைச்சர் விளக்கம் தரட்டும்' - மாநிலங்களவையில் குரலெழுப்பிய கார்கே!

மக்களவை பாதுகாப்பு குறைபாடு குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். 
'உள்துறை அமைச்சர் விளக்கம் தரட்டும்' - மாநிலங்களவையில் குரலெழுப்பிய கார்கே!
Published on
Updated on
2 min read

மக்களவை பாதுகாப்பு குறைபாடு குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி இன்று பிற்பகல் இருவர்  நுழைந்து புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக பேசிய பாஜக எம்.பி. பியூஸ் கோயல், 'மாநிலங்களவை மூத்தவர்கள் சபை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம்விட இந்த நாடு பலம் வாய்ந்தது என்று ஒரு செய்தியை நாம் கொடுக்க வேண்டும். எனவே, அவை நடவடிக்கைகள் தொடர வேண்டும். காங்கிரஸ் இதை அரசியலாக்குகிறது, இது நாட்டுக்கு நல்ல செய்தியல்ல' என்று பேசினார். 

பின்னர் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது மிகவும் தீவிரமான பிரச்னை.  இது வெறும் மக்களவை, மாநிலங்களவை பற்றியது அல்ல, இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி இருவர் உள்ளே நுழைந்து பாதுகாப்பு மீறலை ஏற்படுத்த முடிந்தது என்பது பற்றியது.

அவையை ஒத்திவைக்க கேட்டுக்கொள்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் வந்து இதுகுறித்து விளக்கம் தரட்டும்' என்று பேசினார். 

அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறும்போது, 'இதுபற்றி அறிந்தவுடன் பாதுகாப்பு இயக்குநரை போனில் தொடர்பு கொண்டேன். அவர் எனக்கு அளித்த தகவலை நான் அவையில் பகிர்ந்து கொண்டேன். இது கவலைக்குரிய விஷயம்தான். ஆனால் கூடுதல் விவரங்களுக்கு காத்திருப்போம்' என்று கூறியுள்ளார். 

இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.

சம்பவம் குறித்து தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, சிஆர்பிஎப் தலைவர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com