அதே நாள்.. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் மீண்டும் ஒரு சம்பவம்

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாளான இன்று மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்து களேபரம் செய்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே நாள்.. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் மீண்டும் ஒரு சம்பவம்


2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி 11.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாளான இன்று மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்து களேபரம் செய்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்று, பழைய நாடாளுமன்றக் கட்டத்துக்குள் பயங்கரவாதிகள் பாதுகாப்புத் தடுப்புகளை எல்லாம் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொன்றனர்.

இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் எந்த சலசலப்பும் இல்லாமல், நான்கு கட்ட சோதனைகளைத் தாண்டி தடை செய்யப்பட்ட பொருள்களுடன் இருவர் உள்ளே நுழைந்து மக்களவைக்குள் உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2001-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி லக்ஷா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 5 போ் நாடாளுமன்ற வளாகத்துக்குள் தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதலில் தில்லி காவல்துறையினர் 5 போ், மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த பெண் ஒருவா், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளா்கள் 2 போ் மற்றும் செய்தியாளா் ஒருவா் என 9 போ் உயிரிழந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

தாக்குதல் நடைபெற்று இன்று 22-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவுநாளில், நாடாளுமன்றத்துக்கு வந்த உறுப்பினர்கள் அனைவரும், வெளியே, பயங்கரவாதத் தாக்குதலில் பலியான வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தவிட்டு உள்ளே சென்றனர். ஆனால், அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை மக்களவைக்குள் எழுந்தது.

மக்களவையின் பார்வையாளர் மடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்து, மேஜை நாற்காலிகள் மீது தாவிக்குதித்து ஓடினர். சர்வாதிகாரம் ஒழிக என்ற கோஷத்துடன் அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசியதால், அவைக்குள் என்ன நடக்கிறது என்பதே அவை உறுப்பினர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால், இருவரும் குதித்த பகுதியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரிதமாக செயல்பட்டு இருவரையும் மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்கள் வாயிலாக பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி காலையில் அவைக் கூடியதும் 11.30 மணிக்கு பயங்கரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதல் சம்பவங்கள் கண்முன் வந்துபோயிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்த சம்பவம் வேறொரு நாளில் நடந்திருந்தாலும் கூட அது பாதுகாப்புக் குறைபாடு என்ற ஒரு தொணியில் முடிந்திருக்கும். ஆனால், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில், நிச்சயம் நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு கூடுதல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படியொரு நாளில் எவ்வாறு இந்த அத்துமீறல் நடந்திருக்கிறது என்பதுதான் கேள்வியாக மக்கள் மனதில் எழுகிறது.

மக்களவைக்குள் புகைக் குண்டுகளை மர்ம நபர்கள் திறந்ததால் அங்கே மஞ்சள் நிறப் புகை சூழ்ந்துகொண்டது. இதனால், அங்கிருந்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அது வெறும் நிறப் புகைதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பதற்றம் தணிந்து, மக்களவை அரை மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் கூடியது.

பாதுகாப்பில் குறைபாடு, அத்துமீறல் என பல வகைகளில் இந்த சம்பவத்தை வகைப்படுத்தினாலும், சாதாரண எளிய நபர்கள் கூட தடை செய்யப்பட்ட பொருளுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிடமுடியும் என்பதையே டிசம்பர் 13, நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் நடந்த இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. இதைத்தான் தடுக்க, தவிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளைத் தடுத்து பலப்படுத்த வேண்டும் என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com