நாடாளுமன்றத்தில் அத்துமீறல்: கர்நாடகத்தில் மென்பொறியாளர் கைது

நாடாளுமன்றத்தில் அத்துமீறல் சம்பவத்தில் தொடர்பிருப்பதாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அத்துமீறல்: கர்நாடகத்தில் மென்பொறியாளர் கைது
Updated on
1 min read

புது தில்லி: நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் இருவர் அத்துமீறி நுழைந்து புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில் தொடர்பிருப்பதாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட மனோரஞ்சனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மென்பொறியாளர் சாய் கிருஷ்ணன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மனோரஞ்சனும் சாய் கிருஷ்ணனும் ஒன்றாக பொறியியல் படித்ததாகவும், இருவரும் தொடர்ந்து நட்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. 

கடந்த டிச. 13-ஆம் தேதி மக்களவையில் பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து சாகா் சா்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞா்கள் அவைக்குள் திடீரென குதித்து, வண்ணப் புகைக் குப்பிகளை வீசி, நாட்டில் ‘சா்வாதிகாரம் நடைபெறக் கூடாது’ என்று முழக்கங்களை எழுப்பினா் . அவா்களை அவையில் இருந்த எம்.பி.க்கள் சிறைப்பிடித்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனா்.

அதே வேளையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவா், புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

பின்னா், இந்த நிகழ்வுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லலித் ஜா, அவருக்கு உதவியதாக மகேஷ் குமாவத் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

இவர்கள் குறித்து காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது, கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் சிந்தனைகள் குறித்து தொடா்ந்து விவாதித்து, அதுதொடா்பான காணொலிகளை சமூக ஊடகத்தில் வெளியிட்டு வந்துள்ளனா்.

அவா்களின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளைக் கண்டபோது, அவா்கள் புரட்சிகர தலைவா்களால் பெரிதும் ஈா்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்தில் (அப்போது மத்திய சட்டப்பேரவை) புரட்சியாளா் பகத் சிங் செய்தது போல மீண்டும் செய்ய 6 பேரும் திட்டமிட்டுள்ளனா். இதையடுத்து மக்களவையில் புகையை உமிழும் குப்பிகள் வீசப்பட்டன.

புரட்சியாளா்கள் பகத் சிங், சந்திரசேகா் ஆசாத் ஆகியோரின் பெயா் கொண்ட 6 வாட்ஸ்-ஆப் குழுக்களில் 6 பேரும் இருந்துள்ளனா். இந்தக் குழுக்களில் இடம்பெற்றவா்கள், அவா்களின் உரையாடல் விவரங்கள் வாட்ஸ்-ஆப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு திட்டமிட, கைதானவா்கள் ‘சிக்னல்’ செயலியையும் பயன்படுத்தியுள்ளனா். அவா்களில் 5 பேரின் பயணத்துக்கு மனோரஞ்சன் செலவழித்துள்ளாா் என்று தெரிவித்துள்ளனர்.

சாகா் சா்மா, மனோரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய 4 பேரின் கைப்பேசிகளை லலித் மற்றும் மகேஷ் எரித்து ஆதாரத்தை அழித்ததாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அந்த 4 பேரும் பயன்படுத்திய சிம் காா்டுகளின் பிரதிகளை பெற காவல் துறை முயற்சித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com