2023 பேரவைத் தேர்தல்களில் பலவீனமானது யார்?

2023ஆம் ஆண்டில் நடைபெற்ற 9 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியும், 2-ல் காங்கிரஸும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன.
2023 பேரவைத் தேர்தல்களில் பலவீனமானது யார்?

2023ஆம் ஆண்டில் நடைபெற்ற 9 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியும், 2-ல் காங்கிரஸும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன.

ஒரு மாநிலத்தில் பாஜக கூட்டணிக் கட்சியும், 2 மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் ஆட்சியைப் பிடித்துள்ளன.

2024 மக்களவை தேர்தலுக்கு அரையிறுதி களமாக இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள் பார்க்கப்பட்டது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகள் தங்களின் செல்வாக்கை தெரிந்துகொள்ளும் இறுதி களமாக சட்டப்பேரவைத் தேர்தல்கள் காணப்பட்டன.

முன்னதாக 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற 7 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஹிமாசலப் பிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. ஏற்கெனவே ஆட்சி செய்த பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் இழந்தது. உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற அதிக தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் படுதோல்வியை சந்தித்தது.

இதன் விளைவாக குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் காங்கிரஸ் தரப்பு வேட்பாளர் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இந்த படுதோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்தது. அதில், ஒன்றுதான் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம். 

2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்த கர்நாடகம், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.

அந்த வேளையில், மக்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும் தேர்தலில் அது வாக்குகளாக மாறவில்லை.

திரிபுரா, மேகாலயம், நாகலாந்து தேர்தல்

இந்தாண்டு பிப்ரவரியில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 2 மாநிலங்களைக் கைப்பற்றியது. மேகாலயத்தில் மேகாலயா ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடித்தது.

கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நாகலாந்தில் 12 தொகுதிகளிலும், மேகாலயத்தில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.

மேகாலயத்தில் கடந்த முறை 21 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், தற்போது வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. திரிபுராவில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

வடகிழக்கு மாநில மக்கள் மத்தியில் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் எடுபடவில்லை. இந்த மூன்று மாநிலங்களிலும் ராகுல் காந்தி முழு வீச்சில் பிரசாரம் செய்யாததும் காங்கிரஸுக்கு பலவீனமாக அமைந்தது.

கர்நாடக தேர்தல்

மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்றது காங்கிரஸ்.

கர்நாடக அரசியலில் மதத்தைவிட சாதி அரசியலே வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. குறிப்பாக லிங்காயத்து, ஒக்காலிகா ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்கள் நினைப்பவர்களே முதல்வராவது வரலாறு.

இந்த நிலையில், ஆட்சியில் இருந்த பாஜக லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவை பதவி விலகச் செய்து பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது அந்த சமூக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

பாஜகவில் இருந்து லிங்காயத் சமூகத்தின் முக்கியத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பலரும் ஓரம்கட்டப்பட்டனர்.

இந்த அதிருப்தியை சரிசெய்யவும், லிங்காயத் மற்றும் ஒக்காலிகா சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவிகித ஒதுக்கீட்டை ரத்து செய்து இரு சமூகத்திற்கும் தலா 2 சதவிகிதமாக பிரித்து வழங்கியது பாஜக. இதனால், பாஜகவுக்கு எதிராக சிறுபான்மை மக்களும் திரும்பினர்.

மேலும், மாநில ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவிகிதம் கமிஷன் பெறுவதாக பாஜக அரசின் மீது காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டும் தேர்தலில் எதிரொலித்தது.

இவை அனைத்தும் கர்நாடக தேர்தலில் பாஜகவை படுதோல்வி அடைய வைத்தது. நீண்ட காலமாக வெற்றியை ருசிக்காத காங்கிரஸுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135, பாஜக 66, ஜனதா தளம் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

5 மாநிலத் தேர்தல்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திமுக உள்பட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்தனர்.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் இணைந்து 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு பாஜகவுக்கு சவாலாக இருப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர். 

ஆனால், கூட்டணிகளை ஒதுக்கிவிட்டு தனியாக களம் காண நினைத்த காங்கிரஸுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. காங்கிரஸின் முக்கிய வாக்குறுதியாக பார்க்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு உத்தி மக்களிடையே எடுபடவில்லை.

தேர்தல் வாக்கெண்ணிக்கை வெளியாகும் வரை மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அரசியல் நிபுணர்களால் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்தது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

மத்திய பிரதேசத்தில் வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது கடந்த முறையைவிட 48 தொகுதிகள் குறைவாகும். 163 தொகுதிகளை கைப்பற்றி பலம் வாய்ந்த கட்சியாக பாஜக ஆட்சியை தக்கவைத்தது.

ம.பி. தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் இணக்கமாக போகாததே. சமாஜ்வாதிக்கு தொகுதி ஒதுக்காததால் அதிருப்தி அடைந்த அகிலேஷ் யாதவ், காங்கிரஸுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டார். இது காங்கிரஸுக்கு பின்னடைவாக அமைந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்திலும் கடந்த முறையைவிட பாதிக்கு பாதி குறைவான தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது காங்கிரஸ். பாஜக 54 தொகுதிகளுடன் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 35 தொகுதிகள். பிற கட்சி 1 தொகுதி.

மிசோரமில் தேர்தல் கணிப்பின்படி, ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நடந்த கலவரம், மிசோரமிலும் எதிரொலித்தது.

மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக மிசோ தேசிய முன்னணியின் வாதம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மிதேமு 10, பாஜக 2 தொகுதிகளில் வெற்றி.

தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் எதிர்பார்த்ததைவிட மிகப் வெற்றி கிடைத்தது. தெலங்கானாவை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பாரதிய ராஷ்டிர சமிதி படுதோல்வியை சந்தித்தது.

பெண்களுக்கு ஊக்கத்தொகை, இலவச மின்சாரம், அரசு வேலை என்ற காங்கிரஸின் வாக்குறுதிகள் தெலங்கானாவில் மட்டும் வெற்றியை தேடிக் கொடுத்தது.

காங்கிரஸ் 64, பாரதிய ராஷ்டிர சமிதி 39, பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், பாஜக வெற்றி பெற்ற தொகுதியின் எண்ணிக்கையும், வாக்கு சதவிகிதமும் அதிகம் என்பது கூடுதல் தகவல்.

தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 17 மாநிலங்களிலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் 10 மாநிலங்களிலும் ஆட்சி செய்து வருகின்றனர். 

இதில், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட 12 மாநிலங்களில் பாஜக மட்டும் தனித்து ஆட்சி செய்து வருகின்றது.

ஆனால், காங்கிரஸ் 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள 7 மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதில், திரிணமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கடைசி வரை காங்கிரஸுக்கு முழு ஆதரவளிக்கும் என்பது உறுதியல்ல.

இரண்டு கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் 3 மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. ஆனால், ஆந்திரத்தை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தேவை ஏற்படின் பாஜகவுக்கே ஆதரவளிக்கும்.

ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட காங்கிரஸின் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். புதிய உத்திகளை கொண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், மோடி என்ற பெயரும், மத அரசியலும் ஒட்டுமொத்த வடமாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் மக்கள் மனம் வைத்தால் மட்டுமே ‘இந்தியா’வுக்கு மார்கமுண்டு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com