பிரதமரே, இப்போது நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்: ராகுல் காந்தி 

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளில் பிரதமர் கவலைப்படவில்லை என்றும், தனது நண்பரின் தொழில் மற்றும் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை காட்டுவதாகவும்....
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
2 min read

புதுதில்லி:  பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளில் பிரதமர் கவலைப்படவில்லை என்றும், தனது நண்பரின் தொழில் மற்றும் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை காட்டுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார். 

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம் அறிமுகப்படுத்திய பட்ஜெட் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட காந்தி, இந்தியாவின் ஒற்றுமை நடைப்பயணத்தின் போது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களைப் பாதித்துள்ள பிரச்னைகளை உணர்ந்ததாகக் கூறினார்.

"பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், நல்ல கல்வி, சுகாதார வசதிகள் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட காங்கிரஸ் முயற்சிக்கிறது. ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் காங்கிரஸின் தொலைநோக்கு பார்வை தெரிகிறது," என்று ராகுல் கூறியுள்ளார். 

தனது முகநூல் பக்க பதிவில், மத்திய பட்ஜெட்டை ராஜஸ்தான் அரசின் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். “ஒரு பக்கம் மத்தியில் ஆளும் பாஜக அரசின் பட்ஜெட், இன்னொரு பக்கம் ராஜஸ்தான் மாநில பட்ஜெட் தாக்கலாகி இருக்கிறது. மத்திய அரசு பட்ஜெட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசப்படவே இல்லை.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிமுகப்படுத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  ராஜஸ்தான் அரசு அறிவித்த முக்கிய நிவாரணப் புள்ளிகள் குறித்து கூறியுள்ள ராகுல் காந்தி, பொதுமக்களுக்கு ரூ.1100 மதிப்புள்ள சமையல் எரிவாயு உருளை வழங்க இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.25 லட்சம் வரை காப்பீடு, ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு 2000 யூனிட் வரை இலவச மின்சாரம், அகவிலை நிவாரணத் தொகுப்பு, 12 ஆம் வகுப்பு வரையிலான இலவச கல்வி போன்ற பல நல்ல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 

"பெண்களுக்கும் பேருந்து கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு, மேலும், கரோனா தொற்று காலத்தில் தாய், தந்தைகளை இழந்து ஆதரவற்றவர்களாக இருப்பவர்களைக் கண்டறிந்து அரசு வேலைகள் வழங்குதல்" என பல நல்ல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்று காந்தி கூறியுள்ளார். 

மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்ணடாட்டம் பற்றியெல்லாம் எதுவும் பேசப்படவில்லை. நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போது அதானி குழுமத்தின் பங்குச்சந்தை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை சுட்டிக்காட்டிய காந்தி, "...பிரதமர் பணவீக்கத்தையோ, வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர் எதைப் பார்த்தாலும் அது அவருடைய 'நண்பரின் தொழில் மற்றும் அவருடைய வணிக முன்னேற்றம்" குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக  விமர்சித்துள்ளார். 

மேலும், “பிரதமரே, இப்போது உங்கள் நண்பரின் பாக்கெட்டை நிரப்புவதை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்” என்று ராகுல் காந்தி  கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com