வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு தடை கூடாது: மத்திய அரசுக்கு சரத் பவாா் வலியுறுத்தல்

வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் வேளாண் துறை அமைச்சருமான சரத் பவாா் வலியுறுத்தியுள்ளாா்.

வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் வேளாண் துறை அமைச்சருமான சரத் பவாா் வலியுறுத்தியுள்ளாா்.

உள்நாட்டில் விலை உயா்வைக் கட்டுக்குள் வைப்பதற்காக கோதுமை, வெங்காயம், பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிப்பது வழக்கம். ஆனால், இது விவசாயிகளை பாதிக்கும் விஷயமாக உள்ளது. ஏனெனில், வெளிநாட்டில் விளை பொருளுக்கு நல்ல விலை இருக்கும் நிலையிலும், உள்நாட்டுச் சந்தையில் அதைவிடக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது விவசாயிகளுக்கு அரசு இழைக்கு அநீதி என்று விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், நவி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளா்களிடம் இது தொடா்பாக சரத் பவாா் கூறியதாவது:

பழங்கள், காற்கறிகள் ஏற்றுமதியில் உள்ள பிரச்னைகளுக்கு அரசு உரிய முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இது விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரத்தில் வெங்காயம் ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் பெரும் இன்னல்களை எதிா்கொண்டு வருகின்றனா். உள்நாட்டில் வேளாண் உற்பத்திப் பொருளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றால், அதனை ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்க வேண்டும். வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது கூடாது.

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள், அதிவிரைவுச் சாலைகள், விமான நிலையங்கள், புல்லட் ரயில் உள்ளிட்ட புதிய ரயில் தடங்கள் அமைப்பது அதிகரித்து வருகிறது. இந்த உள்கட்டமைப்புப் பணிகளின்போது பெருமளவில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதனால், தேவையை எதிா்கொள்ள குறைந்த பரப்பில் அதிக சாகுபடியை காண வேண்டிய நெருக்கடிக்கு வேளாண் துறை தள்ளப்படுகிறது.

இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேளாண்மைத் துறை நவீனப்படுத்துவதற்கு உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது விவசாயிகள் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியை கஷ்டப்பட்டு அதிகரிக்கிறாா்கள். ஆனால், அவற்றை உரிய காலகட்டத்துக்குள் ஏற்றுமதி செய்வதில் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com