சிவமொக்கா விமான நிலையத்திற்கு கன்னட கவிஞர் குவெம்பு பெயரை சூட்ட வேண்டும்: எடியூரப்பா

சிவமொக்கா அருகே சொகனே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு கன்னட கவிஞர் குவெம்பு பெயரை சூட்டுவதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று  எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா விமான நிலையத்திற்கு கன்னட கவிஞர் குவெம்பு பெயரை சூட்ட வேண்டும்: எடியூரப்பா

பெங்களூரு: சிவமொக்கா அருகே சொகனே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு கன்னட கவிஞர் குவெம்பு பெயரை சூட்டுவதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

குவெம்பு என்று அழைக்கப்படும் குப்பாலி வெங்கடப்பா புட்டப்பா, 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கன்னட கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். டிசம்பர் 29, 1904 இல் மைசூரில் பிறந்த இவர், கன்னட எழுத்தாளர்களில் ஞானபீட விருதைப் பெற்ற முதல் கவிஞர்.

கன்னட இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக, கர்நாடக அரசு அவருக்கு 1958 இல் கெளரவமான ராஷ்டிரகவி (தேசியக் கவிஞர்) மற்றும் 1992 இல் கர்நாடக ரத்னா விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. 

சிவமொக்கா அருகே சொகனே பகுதியில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் வருகிற 27 ஆம் தேதி திறக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவமொக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் முயற்சியால் சிவமொக்காவுக்கு விமான நிலையம் கிடைத்துள்ளது. இதனால் சிவமொக்காவின் விமான நிலையத்துக்கு எடியூரப்பாவின் பெயரே சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார். 

இந்நிலையில், சிவமொக்கா விமான நிலையத்திற்கு என பெயரை சூட்ட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கன்னட கவிஞர் மற்றும் எழுத்தாளர் குவெம்புவின் பெயரை சூட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து எடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை  சிவமொக்காவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவமொக்கா விமான நிலையத்துக்கு எனது பெயரை சூட்ட வேண்டாம். அதற்கு பதிலாக ஞானபீட விருது பெற்ற தேசியக் கவிஞர் குவெம்புவின் பெயரை வைக்க வேண்டும். குவெம்புவின் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியே கூறியுள்ளார். நாங்களும் 20 ஆம் நூற்றாண்டில் இந்த நாடு கண்ட மாபெரும் கவிஞரும், ஞானபீட விருது பெற்றவருமான ராஷ்டிரகவி குவெம்புவின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளோம்." இதை வருகிற 27 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பார். இதுவே எனது விருப்பம். சிவமொக்கா மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற உள்ளது என்று பிஎஸ் எடியூரப்பா கூறினார். 

மேலும், விமான நிலையத்திற்கு பெயரை இறுதி செய்வது தொடர்பாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் எடியூரப்பா கூறினார்.

"உலகளாவிய செய்தியை எழுத்து மூலம் போதித்தவர் குவெம்பு. அதை செயல்படுத்த பிரதமர் மோடி கடுமையாக உழைத்து வருகிறார். வசுதைவ குடும்பத்தின் தத்துவத்தை பரப்ப பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார்" என்று பிஎஸ் எடியூரப்பா கூறினார்.

குவெம்புவின் காவியக் கதையான 'ஸ்ரீ ராமாயண தரிசனம்', இந்திய இந்து இதிகாசமான ராமாயணத்தின் நவீன ரெண்டரிங், சமகால வடிவத்திலும் வசீகரத்திலும் மகாகாவ்யா (பெரிய காவியக் கவிதை) சகாப்தத்தின் மறுமலர்ச்சியாகக் கருதப்படுகிறது.

அவரது எழுத்துகள் மற்றும் 'உலகளாவிய மனிதநேயத்திற்கு' அவரது பங்களிப்பு நவீன இந்திய இலக்கியத்தில் அவருக்கு ஒரு தனித்துவமான இடத்தை வழங்குகிறது.

குவெம்பு நவம்பர் 1, 1994 அன்று தனது 89 ஆவது வயதில் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com