தில்லி-மும்பை விரைவுச் சாலையில் இந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை; ஏன்?

தில்லி - மும்பை இடையே புதிதாகத் திறக்கப்பட்ட விரைவுச் சாலையில் குறிப்பிட்ட சில வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தில்லி-மும்பை விரைவுச் சாலையில் இந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை; ஏன்?
தில்லி-மும்பை விரைவுச் சாலையில் இந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை; ஏன்?


தில்லி - மும்பை இடையே புதிதாகத் திறக்கப்பட்ட விரைவுச் சாலையில் குறிப்பிட்ட சில வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறிப்பிட்ட வேகத்தில் செல்ல முடியாத, மெதுவாகச் செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவுச்சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்புக் கருதியும், விபத்துகளை குறைக்கும் வகையில், குறைந்த வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களை இந்த சாலையில் இயக்க அனுமதி மறுத்துள்ளது மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை.

அதாவது, மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் போன்றவற்றை, இந்த விரைவுச்சாலையில் இயக்க முடியாது. இயக்கக் கூடாது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறைக் கழகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது.

பொதுவாகவே, விரைவுச்சாலைகளில் வேகம் குறைவாக இயக்கப்படும் வாகனங்களை இயக்க அனுமதியில்லை. நாட்டின் எந்த விரைவுச்சாலைகளுக்கும் இது பொருந்தும். எனினும், விரைவுச்சாலை திறக்கப்பட்டதும், தேசிய நெடுஞ்சாலைத்துறை கழகம் சட்டப்படி, இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஏற்கனவே தில்லி -  மீரட் உள்ளிட்ட விரைவுச்சாலை உள்ளிட்டவற்றுக்கும் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டிருந்தாலும், அதுபோன்ற வாகனங்களை சாலையில் நுழையாமல் தடுப்பதில் கடும் சவால்கள் உள்ளன.

மேலும், இந்த விரைவுச்சாலைகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட வாகனங்களும் குறிப்பிட்ட வேகத்தில்தான் இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தலை உருவாக்கி, வேகத்தைக் கண்காணிக்கும் கருவிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த வேக விகிதிம் மணிக்கு 80 - 120 கிலோ மீட்டர் வேகத்தில் என்று அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

தில்லி-மும்பை இடையே விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தில்லி-தௌசா-லால்சோட் வரையிலான விரைவுச் சாலையின் முதல்கட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்தவாரம் தொடக்கிவைத்தாா்.

விரைவுச் சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தால், நாட்டின் மிக நீண்ட விரைவுச் சாலை என்ற பெருமையைப் பெரும். 

ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ்
விரைவுச் சாலையில் விபத்து ஏற்படும்பட்சத்தில், காயமடைந்தவா்களை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படவுள்ளது.

விலங்குகளுக்கான வழித்தடங்கள்
விரைவுச் சாலையை விலங்குகள் எளிதில் கடப்பதற்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதி ஆசியாவிலேயே முதல் முறையாகவும், உலகிலேயே இரண்டாவது முறையாகவும் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கச் சாலைகள்
விரைவுச் சாலையின் இரு இடங்களில் 8-வழி சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. ராஜஸ்தானின் முகுந்த்ரா பல்லுயிா்க் காப்பகம், மகாராஷ்டிரத்தின் மதேரன் சூழலியல் மண்டலம் ஆகியவற்றில் சுரங்கப் பாதைகள் கட்டப்படவுள்ளன.

எரிபொருள் சேமிப்பு
விரைவுச் சாலையின் மூலமாக ஆண்டுக்கு 32 கோடி லிட்டருக்கும் அதிகமான எரிபொருளைச் சேமிக்க முடியும். வாகனங்கள் மூலமான கரியமிலவாயு வெளியேற்றத்தையும் பெருமளவில் குறைக்க முடியும்.

வேலைவாய்ப்பு
விரைவுச் சாலை மூலமாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வசதிகள் உருவாகும். விரைவுச் சாலையையொட்டியுள்ள கிராமங்களில் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன்மூலமாக அந்த கிராமங்களைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் பலனடையவுள்ளனா்.

சுற்றுலா
விரைவுச் சாலையால் சுற்றுலாத் துறையும் பெரும் வளா்ச்சி காணும். ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் உள்ள தேசியப் பூங்காக்கள், தொல்லியல் சின்னங்கள், பல்லுயிா்க் காப்பகங்கள் உள்ளிட்டவற்றுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com