இந்தூர்: நடப்பு ஆண்டில் முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகண நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில் 2 கிரகண நிகழ்வுகளை இந்தியாவில் காண முடியும் என மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டு கிரணங்கள் நிகழ்வு குறித்து மத்தியப்பிரததேசத்தின் உஜ்ஜைனில் உள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் கூறியதாவது:
நடப்பு ஆண்டில் இரண்டு சூரிய கிரகணமும், இரண்டு சந்திர கிரகணமும் நிகழ்கிறது. ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. "ஆனால் அதனை இந்தியாவில் காண முடியாது," என்று குப்த் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மே மாதத்தில் 5,6 ஆம் தேதிகளில் சந்திக்கும் இரவில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியும். நிகழ்வின்போது சந்திரன் தெரியும், ஆனால் வழக்கத்தை விட குறைவான பிரகாசத்துடன் காணப்படும் என்றார்.
அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் இடைப்பட்ட இரவில் ஒரே ஒரு `வளைய சூரிய கிரகணம்' நிகழ்கிறது. இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியாது.
அதே மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் பகுதியளவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனை இந்தியாவில் காணலாம். இந்த கிரகணத்தின் போது சந்திரனின் 12.6 சதவீதம் பூமியின் நிழலில் இருக்கும் என்று டாக்டர் குப்த் கூறினார்.
2022 ஆம் ஆண்டில், இரண்டு முழு சந்திர கிரகணங்கள் மற்றும் இரண்டு பகுதியளவு சூரிய கிரகணங்கள் நிகழ்ந்தன என்றார்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது, அதே நேரத்தில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.