கேஒய்சி தகவல் அளிக்க வங்கிக்குச் செல்ல வேண்டாம்: ரிசர்வ் வங்கி தகவல்!

கேஒய்சி-க்கு தகவல் அளிக்க வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
கேஒய்சி தகவல் அளிக்க வங்கிக்குச் செல்ல வேண்டாம்: ரிசர்வ் வங்கி தகவல்!
Published on
Updated on
1 min read

கேஒய்சி-க்கு தகவல் அளிக்க வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை என்று ஆர்பிஐ கூறியுள்ளது.

கேஒய்சி(KYC) என்பது 'உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்' (Know Your Customer) என்பதாகும். வங்கி தனது வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி குறித்த தகவலைப் பெறும் நடைமுறை. இதனால் வங்கிகள் அளிக்கும் சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும். வங்கியில் கணக்குகள் தொடங்கும்போது கேஒய்சி அளிக்க வேண்டும். அவ்வப்போது வாடிக்கையாளர்கள் அடிப்படைத் தகவல்களை உறுதி செய்ய கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். 

இந்நிலையில் கேஒய்சி-யை புதுப்பிக்க/அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை என்று ஆர்பிஐ கூறியுள்ளது. பதிலாக, வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல், தொலைபேசி, ஏடிஎம், நெட்பேங்கிங் அல்லது கடிதம் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எளிதாக கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002 -இன் படி, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

முகவரி மாற்றம் செய்தால் மேற்குறிப்பிட்ட வழிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆவணத்தை சமர்ப்பித்தால் வங்கிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சரிபார்க்கும். மேலும், சரியான ஆவணங்கள் இல்லாவிட்டாலோ அல்லது ஆவணங்கள் காலாவதியாகிவிட்டாலோ வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் புதியவற்றை கேட்கலாம்.

ரிமோட் வழியாக கேஒய்சி அப்டேட் வழங்கும் வங்கிகளில் விடியோ அழைப்பு மூலமாகவும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்பது கூடுதல் தகவல். இதுபற்றிய முழு விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது. 

கேஒய்சி-க்காக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் வங்கியை நேரடியாக அணுக வேண்டும், இல்லையெனில் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ், கேஒய்சி-க்காக வாடிக்கையாளர்களை வங்கிக்கு அழைக்கக்கூடாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வழங்கிய அடையாள அட்டை மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட கடிதம் ஆகிய கேஒய்சி-க்கான அதிகாரபூர்வ ஆவணங்கள் ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com