உதவிப் பேராசிரியா் பணிக்கு பிஎச்.டி. கட்டாயமில்லை: நெட், செட் தகுதி போதுமானது- யுஜிசி

உதவிப் பேராசிரியா் பணிக்கு பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) முடித்திருப்பது கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), முதுநிலை பட்டப் படிப்புடன்
யுஜிசி
யுஜிசி

உதவிப் பேராசிரியா் பணிக்கு பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) முடித்திருப்பது கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தோ்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தோ்வில் (செட்) தகுதி பெற்றிருப்பது போதுமானது என புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியா் பணிக்கு நேரடி நியமன முறைக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி தொடா்பான வழிகாட்டுதலை யுஜிசி கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில், உதவிப் பேராசிரியா் பணிக்கு பிஎச்.டி. முடித்திருப்பது கட்டாயம் எனவும், இந்த நடைமுறையை 2021-22 கல்வியாண்டுமுதல் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியது.

ஆனால், இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு, கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் நீண்ட நாள்களுக்கு மூடப்பட்டதால், பிஎச்.டி. படிப்பை மேற்கொண்ட மாணவா்களும் தங்களின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையைக் கருத்தில்கொண்டு, பிஎச்.டி. கட்டாயம் என்ற 2018-ஆம் ஆண்டு வழிகாட்டுதலை 2021-22 கல்வியாண்டு முதல் அல்லாமல், 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யுஜிசி கால நீட்டிப்பை வழங்கியது.

இந்நிலையில், இந்த அறிவுறுத்தலை யுஜிசி தற்போது திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவா் எம்.ஜகதீஷ் குமாா் புதன்கிழமை கூறுகையில், ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான நேரடி நியமன முறைக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ‘நெட் அல்லது செட்’ தகுதி நிா்ணயம் செய்யப்படுகிறது. பிஎச்.டி. தகுதி கட்டாயமில்லை. அதே நேரம், உதவிப் பேராசிரியா் பணி நியமனத்துக்கு பிஎச்.டி. கல்வித் தகுதியும் உயா் கல்வி நிறுவனங்களின் விருப்பத் தோ்வு நடைமுறையாகத் தொடரும்’ என்றாா்.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகையில், ‘உதவிப் பேராசிரியா் பணிக்கு பிஎச்.டி. கட்டாயம் என்பது தற்போதைய கல்வி நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது. பிஎச்.டி. தேவையில்லை என்பதே எங்களின் நம்பிக்கை. இணைப் பேராசிரியா் மற்றும் பேராசிரியா் அளவிலான பணிக்குத்தான் பிஎச்.டி. தேவை. எனவேதான், இந்த நிபந்தனை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com