அதிகார ஆசை இல்லை; மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: சரத் பவார்

எங்களுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். 
அதிகார ஆசை இல்லை; மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: சரத் பவார்

எங்களுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். 

மும்பையில் ஒய்பி சவான் மையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத் பவார், 'இன்று ஒட்டுமொத்த நாடும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கட்சிக்கு இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாகும். தடைகளை மீறி நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். 

எங்களுக்கு அதிகார ஆசையில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். உத்தவ் தாக்கரேவுக்கு என்ன நடந்ததோ அதுவே எங்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது. 

பிரச்னை ஏதேனும் இருந்தால் அஜித் பவார் எங்களுடன் பேசியிருக்க வேண்டும். அவர் மனதில் என்ன இருக்கிறதோ அதை எங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். 

எங்களை ஊழல் கட்சி என்று பாஜக விமரிசித்த நிலையில் தற்போது அஜித் பவாரை இணைத்துக்கொண்டது ஏன்? அஜித் பவார் தரப்பு எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. 

கட்சியின் சின்னம் எங்களிடம் உள்ளது. அது எங்களைவிட்டு எங்கும் போகாது. எங்களை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களும், கட்சியினரும் எங்களுடன் இருக்கிறார்கள்' என்று பேசியுள்ளார். 

மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் 

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவளித்ததுடன், மகாராஷ்டிரத்தின் 2-வது துணை முதல்வராகவும் அஜித் பவார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். மேலும் அவருடன் 8 எம்எல்ஏக்களும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா். 

அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்தை தனது தரப்புக்கு வழங்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் மனு அளித்துள்ளார். தனக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

அதுபோல முடிவெடுக்கும் முன் தங்களது கருத்தை கேட்க வேண்டும் என்று சரத் பவார் தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே இன்று மும்பையில் சரத் பவார், அஜித் பவார் ஆகிய இருவரது தரப்பிலும் தனித்தனியே கூட்டம் நடத்தப்பட்டது. 

அஜித் பவார் ஏற்கெனவே 2019ல் பாஜகவுடன் இணைந்து பின்னர் சிறிது காலத்திலேயே அதிலிருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com