இளைஞர்களுக்காக பிரதமர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்: அஸ்வினி வைஷ்ணவ்

பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளதாகவும், நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளதாகவும், நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வந்தே பாரத், விமான நிலையங்கள், துறைமுகங்களை நவீனப்படுத்துதல் மற்றும் விரைவுச் சாலைகள் போன்றன அதற்கான எடுத்துக்காட்டுகளாகும். நீங்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு உங்களுக்கான பொருளாதார நடவடிக்கையில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவுக்கு தேவையான மின்சாதன பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இன்று 98 சதவிகித மின் சாதனப் பொருள்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஐஃபோன் உள்பட பல தொலைபேசிகளின் பாகங்கள் தமிழகத்தில்  தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவிலும் இது போன்ற வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட போதிலும் 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா 2-வது பெரிய நாடாகத் திகழ்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் இன்று அனைத்துத் துறைகளிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதத்தில் 930 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக மக்களின் பிரச்னைக்கு நீங்கள் தீர்வு காண விரும்பினால், உங்களால் முடியும். மத்திய அரசு அதற்கான கட்டமைப்புகளை நாட்டில் உருவாக்கியுள்ளது.

புதிதாக தொழில் தொடங்குவோருக்கான வசதிகளை பிரதமர் உருவாக்கியுள்ளார். இதன்மூலம், தங்கு தடையின்றி ஒருவர் புதிய தொழிலை தொடங்க முடியும். 10 ஆண்டுக்கு முன்னதாக புதிதாக தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை 400 ஆக இருந்தது. ஆனால், இன்று லட்சக்கணக்கில் புதிதாக தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் தங்களது பணியில் கவனத்தை செலுத்தி மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தர் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com