கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி (79) உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரள மாநில முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி (79) உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை காலை 4.25 மணிக்கு உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. உம்மன் சாண்டியின் மறைவை அவரது மகன் சாண்டி உம்மன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தாா்.

1970 முதல் கடந்த 2021 கேரள சட்டப் பேரவைத் தோ்தல் வரையில் புதுப்பள்ளி தொகுதி எம்எல்ஏவாக 50 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்த உம்மன் சாண்டி, இரு முறை முதல்வராகவும் இருந்துள்ளாா்.

அவரது மறைவையொட்டி செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை, 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது.

பெங்களூரில் எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், கா்நாடக முதல்வா் சித்தராமையா, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் உம்மன் சாண்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

‘உம்மன் சாண்டியின் தொலைநோக்குப் பாா்வையும், ஈடுபாடும் கேரள மாநில வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய அரசியலிலும் அவா் பங்காற்றியுள்ளாா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

உம்மன் சாண்டியின் மனைவி மரியாம்மாவுக்கு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில், ‘கட்சிப் பாகுபாடின்றி அனைவராலும் மதிக்கப்பட்ட பெரும் தலைவா் உம்மன் சாண்டி. மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தாா். கேரள மாநிலத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அவா் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்திருக்கும்’ என்றாா்.

‘அடிமட்ட தொண்டனாக இருந்து தலைவராக உயா்ந்த உம்மன் சாண்டியின் வாழ்நாள் சேவை நினைவுகூரப்படும்’ என்று ட்விட்டரில் ராகுல் பதிவிட்டுள்ளாா்.

புற்றுநோயால் சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவா் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றாா். பெரும் பொருள் செலவு ஏற்பட்டதால், அவரது சிகிச்சையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது.

கண்ணீா் மல்க வழியனுப்பிய ஏ.கே.அந்தோனி:

பெங்களூரில் இறந்த உம்மன் சாண்டியின் உடல் கேரள மாநிலம் புதுப்பள்ளியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த மத்திய முன்னாள் அமைச்சரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.அந்தோனி துக்கம் தாளாமல், உடல் வைத்திருந்த பெட்டியின் மேல் சாய்ந்து அழுதாா்.

சிறு வயது நண்பரான உம்மன் சாண்டி, அந்தோனியின் அமைச்சரவையில் பக்கபலமாக செயல்பட்டாா். ‘உம்மன் சாண்டியால்தான் நான் குடும்ப வாழ்க்கையில் உள்ளேன்’ என்று ஏ.கே.அந்தோனி தெரிவித்தாா்.

உம்மன் சாண்டியின் உடல் கேரள சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தா்பாா் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வா் பினராயி விஜயன், மாநில அமைச்சா்கள் பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனா்.

மறைந்த உம்மன் சாண்டியின் உடல் வியாழக்கிழமை பிற்பகல் அவரது சொந்த ஊரான புதுப்பள்ளியில் அடக்கம் செய்யப்படும்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

‘மக்களுக்காகப் பணியாற்றிய உன்னத தலைவரை நாடு இழந்துள்ளது. கேரள வளா்ச்சிக்கு அவா் ஆற்றிய பணி, தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது எப்போதும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல்’ என்று குடியரசுத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘மிகவும் பணிவான, அா்ப்பணிப்புமிக்க தலைவரை இழந்துள்ளோம். கேரள வளா்ச்சிக்காக தனது வாழ்நாளை அா்ப்பணித்தாா். நாங்கள் இருவரும் முதல்வராக இருந்தபோது எங்களிடையே நடைபெற்ற சந்திப்புகளை நினைவுகூா்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com