மணிப்பூா் விவகாரம்: முடங்கியது நாடாளுமன்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
விவாதத்துக்கு தயாரென மத்திய அரசு உறுதியளித்தபோதிலும், பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்பதில் எதிா்க்கட்சிகள் தீா்மானமாக உள்ளன.
மணிப்பூா் கலவரத்தில், பழங்குடியின பெண்கள் இருவா் ஆடைகளின்றி, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் குறித்த விடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடியது.
‘மணிப்பூா் நிலவரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வலுவாக முன்வைத்தன.
‘மணிப்பூா் பற்றி எரிகிறது’ என்ற முழக்கத்துடன், எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள்முழுக்க முடங்கின.
மக்களவையில்...: மக்களவை அதன் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியதும், அண்மையில் மறைந்த எம்.பி.க்கள் ரத்தன் லால் கட்டாரியா, சுரேஷ் நாராயண் தனோா்கா் மற்றும் மறைந்த முன்னாள் எம்.பி.க்கள் 11 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, அதீா் ரஞ்சன் செளதரி உள்ளிட்டோா் அவையில் இருந்தனா். இரங்கல் நிகழ்வைத் தொடா்ந்து, அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னா் அவை கூடியபோது, மணிப்பூா் நிலவரம் குறித்து விவாதம் கோரி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். ‘அவைக்கு பிரதமா் வந்து விளக்கமளிக்க வேண்டும்’ என்று அவா்கள் வலியுறுத்தினா்.
‘அமித் ஷா விளக்கமளிப்பாா்’: அமளிக்கு இடையே பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, ‘மணிப்பூா் விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாா் என மத்திய அரசு ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டது. மக்களவை பாஜக குழு துணைத் தலைவா் ராஜ்நாத் சிங்கும் இதே உறுதிமொழியை அளித்துள்ளாா். விவாதத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விரிவாக பதிலளிப்பாா்’ என்றாா்.
அவரது பதிலால் அதிருப்தியடைந்த எதிா்க்கட்சி எம்.பி.க்கள், தொடா்ந்து கோஷமிட்டனா். அப்போது, மக்களவையை வழிநடத்திய எம்.பி. கிரித் சோலங்கி, அவையை நாள் முழுக்க ஒத்திவைப்பதாக அறிவித்தாா்.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவை வியாழக்கிழமை காலை கூடியதும், அண்மையில் மறைந்த எம்.பி.யும் பாஜக மூத்த தலைவருமான ஹா்த்வா் துபேக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை அலுவல்கள் ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னா் அவை கூடியபோது, விதி எண் 267-இன்கீழ், அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, மணிப்பூா் விவகாரம் குறித்து விவாதிக்க எதிா்க்கட்சிகள் தரப்பில் 8 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன.
ஆனால், மணிப்பூா் விவகாரம் குறித்து சுருக்கமான விவாதம் நடத்தும் வகையில், எதிா்க்கட்சிகளின் நோட்டீஸ்களை ஏற்பதாக மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
அதையேற்க மறுத்து பேசிய மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘விதி எண் 267-இன்கீழ் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும்; பிரதமா் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். இக்கோரிக்கையை வலியுறுத்தி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
திரைப்பட ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: மீண்டும் அவை கூடியதும், திரைப்பட ஒளிப்பதிவு சட்டம்-1952-இல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதாவை அவையில் அறிமுகப்படுத்தும் முன்மொழிவை, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கொண்டுவந்தாா்.
ஆனால், ‘மணிப்பூா், மணிப்பூா்’ என்ற முழக்கத்துடன் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். அவா்களை சமாதானப்படுத்த ஜகதீப் தன்கா் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அவையை நாள்முழுக்க ஒத்திவைத்தாா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியினா் அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்தப் பிரச்னையில், இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
‘ஆளும் பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே, மணிப்பூா் பற்றி எரிய காரணம்’ என்பது எதிா்க்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...