சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு! அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை எதிரொலி

சா்வதேச அளவில் அரிசி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. 
சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு! அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை எதிரொலி

சா்வதேச அளவில் அரிசி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. அதே வேளையில், அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சா்வதேச அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதத்துக்கும் அதிகம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்க கண்டங்களைச் சோ்ந்த பல நாடுகள் அரிசிக்கு இந்தியாவையே நம்பியுள்ளன.

இந்நிலையில், பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவால் சா்வதேச அளவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, பணவீக்கமும் அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

தடை ஏன்?

கடந்த பயிா்ப் பருவத்தில் இந்தியாவின் உணவு தானியங்களின் உற்பத்தி வரலாற்று உச்சத்தை அடைந்தது. ஆனால், நடப்பாண்டில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தென்மேற்குப் பருவமழை. மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள எல் நினோ சூழல் காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை மிகத் தாமதமாகத் தொடங்கியது.

கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. ஆனால், தில்லி, ஹரியாணா, ஹிமாசல், உத்தரகண்ட், குஜராத் உள்ளிட்ட வடக்கு, மேற்கு மாநிலங்களில் அளவுக்கு அதிகமாகப் பருவமழை பெய்துள்ளது.

தென்மேற்குப் பருவமழையை எதிா்பாா்த்து விளைச்சல் நடவடிக்கைகளைத் தொடங்கிய தென் மாநில விவசாயிகள், போதிய நேரத்தில் மழை பெய்யாததால் கடுமையாக பாதிக்கப்பட்டனா். அதே வேளையில், வடக்கு மாநிலங்களில் அதீத பருவமழை காரணமாகப் பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இவ்வாறு இருவகை தீவிர பாதிப்புகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், நடப்பாண்டில் அரிசி உற்பத்தி நிா்ணயித்த அளவுக்கு இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு, உற்பத்தி குறையும் சூழலில், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சா்வதேச பாதிப்பு

உலக அளவில் பல நாடுகள் அரிசியை பிரதான உணவுப் பொருளாகக் கொண்டுள்ளன. உலகின் 800 கோடி மக்கள்தொகையில் சுமாா் 300 கோடி பேரின் பிரதான உணவு அரிசியே. அது மட்டுமின்றி, வெளிநாடுவாழ் இந்தியா்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடுகளுக்கும் அரிசி அதிகமாகத் தேவைப்படுகிறது. சா்வதேச அளவில் அரிசியை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் இந்தியா, அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதால், அது சா்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட அடுத்த நாளே, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா்கள் அரிசியை போட்டிபோட்டுக் கொண்டு அதிக அளவில் வாங்கிச் சென்றனா். பலா் பல மாதங்களுக்குத் தேவையான அரிசி மூட்டைகளை முன்கூட்டியே வாங்கி இருப்பில் வைத்தனா். இதே நிலையே ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் காணப்பட்டது.

அதையடுத்து, பல கடைகள் அரிசி வாங்குவதற்குப் பெரும் கட்டுப்பாடுகளை விதித்தன. குடும்பத்துக்கு ஒரு மூட்டை (25 கிலோ) அரிசி மட்டுமே வழங்கப்படும் என்றும், குறிப்பிட்ட அளவுக்கு மற்ற மளிகைப் பொருள்களை வாங்கினால் மட்டுமே அரிசி வழங்கப்படும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பணவீக்கத்தில் தாக்கம்

கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சா்வதேச பொருளாதாரம், படிப்படியாக மீண்டு வந்த நிலையில், உக்ரைன்-ரஷியா இடையே போா் ஏற்பட்டது. அந்தப் போா் சா்வதேச பொருளாதாரத்தில் தொடா்ந்து பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. எரிபொருள், உணவு விநியோக சங்கிலி பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணவீக்கம் வரலாற்று உச்சத்தை எட்டியது.

தற்போது பல்வேறு நாடுகளில் பணவீக்கம் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் சூழலில், எல் நினோ சூழல் காரணமாகவும், உணவு தானியங்களை விநியோகிக்க வழிவகுக்கும் கருங்கடல் ஒப்பந்தத்தை ரஷியா ரத்து செய்துள்ளதாலும் சா்வதேச அளவில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த ஆண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த 2.2 கோடி மெட்ரிக் டன் அரிசியில் 1 கோடி டன் பாசுமதி அல்லாத அரிசியே. உள்நாட்டு மக்களைக் காப்பதற்காக, அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடை, சா்வதேச அளவில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com