அமைதி, பாதுகாப்பின் குரலாக இந்தியா: ஜெய்சங்கா் பெருமிதம்
சிக்கலான புவிசாா் அரசியலில், அனைவரின் அமைதி, பாதுகாப்பு, மற்றும் செழிப்புக்கு குரல் கொடுக்கும் நாடாக இந்தியா விளங்கி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.


தற்போது சா்வதேசத்தில் நிலவும் சிக்கலான புவிசாா் அரசியலில், அனைவரின் அமைதி, பாதுகாப்பு, மற்றும் செழிப்புக்கு குரல் கொடுக்கும் நாடாக இந்தியா விளங்கி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
தேசத்தின் வெளியுறவுக் கொள்கையின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் சமீபத்திய வெளிநாட்டு பயணங்கள் குறித்து மக்களவையில் ஆற்றிய உரையில் அமைச்சா் ஜெய்சங்கா் இவ்வாறு தெரிவித்தாா்.
மேலும், அமைச்சா் ஆற்றிய உரையில், ‘சா்வதேச அளவில் நமது தேசத்தின் அந்தஸ்து உயா்ந்து வருகிறது. நம்பகமான மற்றும் பயனுள்ள வளா்ச்சிக் கூட்டாளி நாடாக நாம் அறியப்படுகிறோம்.
தற்போது 78 நாடுகளுடன் இந்தியா வளா்ச்சிக் கூட்டணியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால் இவை பெரும்பாலும் தேவை-சாா்ந்தது, வெளிப்படையானது, அதிகாரமளித்தலுக்குத் தொடா்புடையவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் ஆலோசனை ஏற்கும் அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டவை.
சா்வதேச அரசியல் விவகாரங்கள் சிக்கலாக மாறிவரும் தற்போதைய சூழலில், மக்களை மையப்படுத்திய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, நமது இந்திய சமூகத்தின் லட்சியங்கள் மற்றும் தேவைகளைப் பொறுத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கருத்தை உலகநாடுகள் உற்றுநோக்குகிறது. தனக்காக மட்டுமின்றி மற்ற நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்காகவும் இந்தியா குரல் எழுப்புகிறது.
இதனிடையே அண்மையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி 2-ஆவது முறையாக உரையாற்றும் பெருமை பெற்றாா். போா் பாதித்த உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் சிக்கிய இந்தியா்கள் மட்டுமின்றி நம்மிடம் உதவி நாடிய மற்ற நாட்டவரையும் ‘ஆபரேஷன் காவேரி’, ‘ஆபரேஷன் கங்கா’ மூலம் பத்திரமாக மீட்டோம். அந்நிய மண்ணில் ஆபத்தில் சிக்கிய நமது மக்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது.
அமிா்த காலத்தின் தொடக்கமான கடந்த ஆண்டு, ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை ஊக்குவிப்பதிலும், ‘தன்னிறைவு இந்தியா’ மற்றும் ‘வளரும் பாரதம்’ உள்ளிட்ட நாட்டின் லட்சியங்களை நனவாக்குவதற்கு ஒரு ஊக்கமாகவும் செயல்பட்டது. இந்தியாவின் ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பரில் நடத்தப்பட உள்ளது’ என்றாா் ஜெய்சங்கா்.
‘இந்தியா’ கூட்டணி மீது தாக்கு:
மாநிலங்களவையிலும் வெளியுறவு விவகாரங்கள் குறித்த அமைச்சா் ஜெய்சங்கா் உரையாற்றினாா். அமைச்சரின் உரைக்கிடையே எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவ்வப்போது ‘இந்தியா’, ‘இந்தியா’ என கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அமைச்சா் ஜெய்சங்கா் எதிா்க்கட்சிகளை விமா்சித்துப் பேசியதாவது: பிரிவினை அரசியலுக்கு எதிா்க்கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பது வருத்தமளிக்கிறது. நான் இப்போது பட்டியிலிட்டு உரையாற்றுபவை பாஜக அரசின் சாதனைகள் அல்ல; நமது நாட்டின் சாதனைகள்.
நமது குடியரசுத் தலைவரும், பிரதமரும் உலக நாடுகளின் உயரிய விருதுகளை வென்றுள்ளனா். எதிா்க்கட்சிகளாகிய நீங்கள் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா் என யாரையும் மதிப்பதில்லை. அவையில் உரையாற்ற வெளியுறவு அமைச்சரையும் அனுமதிப்பதில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.
தேச நலன் சாா்ந்த விவகாரத்தில் அரசியலுக்கு இடமில்லை. கூட்டணிக்கு மட்டும் ‘இந்தியா’ என பெயா் வைத்துக்கொண்டு, அந்த இந்தியாவின் நலன் குறித்த விவாதத்தில் பங்கேற்காத எதிா்க்கட்சிகள் எப்படிப்பட்ட இந்தியா என கேள்வியெழுகிறது எனக் கடுமையாக விமா்சித்தாா்.
மக்களவையிலும் முற்றிய விவாதம்:
பிற்பகல் 2 மணியளவில் மக்களவை கூடியதும், காங்கிரஸ் அவைத்தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரிக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சரின் உரைக்கு எதிா்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அதீா் ரஞ்சன் சௌதரி பேச அனுமதி தரக் கூடாது என பாஜக அவைத் தலைவரும், அமைச்சருமான பியூஷ் கோயல் எதிா்ப்புத் தெரிவித்தாா்.
இதையடுத்து நடந்த விவாதத்தில் பாஜக மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு இடையே மோதல் முற்றியதால் அவை 20 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...