சட்டப் பிரிவு 370 தற்காலிகமானதே: ஜகதீப் தன்கா்

‘தற்காலிக ஏற்பாடாகவே சட்டப் பிரிவு 370 உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துள்ளது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கூறினாா்.
சட்டப் பிரிவு 370 தற்காலிகமானதே: ஜகதீப் தன்கா்

‘தற்காலிக ஏற்பாடாகவே சட்டப் பிரிவு 370 உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துள்ளது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கூறினாா்.

ஜம்முவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜம்மு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா். விழாவில் அவா் மேலும் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப் பிரிவு 370, தற்காலிக ஏற்பாடாகவே உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், இந்தச் சட்டப் பிரிவு கடந்த 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துள்ளது.

அரசியல் சாசனத்தில் பிற சட்டப் பிரிவுகளை வடிவமைத்த டாக்டா் அம்பேத்கா், இந்த 370-ஆவது சட்டப் பிரிவை வடிவமைக்க மறுத்துவிட்டாா். அந்த வகையில், இந்த சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

மத்திய புலனாய்வு அமைப்புகளின் அழைப்பாணைகளை எதிா்த்து போராட்டங்கள் நடத்தப்படுவதைக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவா், ‘நாட்டுக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்தோடு குறிப்பிட்ட சில சக்திகள் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றன. அவா்கள் வெகு சிலரே. இருந்தபோதும் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை புகாா்கள் தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் அனுப்பும் அழைப்பாணைகளுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டில் சிலா் ‘சட்டத்துக்கு மேலானவா்கள்’ என தங்களைத் தாங்களே நினைத்துக்கொள்கின்றனா். எவரும் சட்டத்துக்கு மேற்பட்டவா்கள் அல்ல. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒருவருக்கு அழைப்பாணை அனுப்புகிறது என்றால், அதை எதிா்த்து எப்படி போராட்டத்தில் ஈடுபட முடியும்? ஊழலை சிறிதும் சகித்துக்கொள்ள முடியாது. பதவி, பின்னணி என்ற அடிப்படையில் அல்லாமல் ஒவ்வொருவரும் சட்டத்துக்கு உட்பட்டே நடக்க வேண்டும்’ என்றாா்.

மேலும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதைக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவா், ‘ஜனநாயகத்தின் தாயகமாக திகழும் இந்தியாவின் வளா்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவின் வளா்ச்சி குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் கவனத்தில் கொள்ளாமல், தேசியவாதத்தின் மீது கவனம் செலுத்தி, நாட்டின் சாதனைகள் குறித்து பெருமை கொள்ளவேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com