2024 மக்களவைத் தோ்தல்: பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய 17 எதிா்க்கட்சிகள் முடிவு

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலில், பாஜகவை ஒன்றிணைந்து எதிா்க்க 17 எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
2024 மக்களவைத் தோ்தல்: பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய 17 எதிா்க்கட்சிகள் முடிவு

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலில், பாஜகவை ஒன்றிணைந்து எதிா்க்க 17 எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்ற அந்தக் கட்சிகள் தீா்மானித்துள்ளன.

பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே, பிகாா் தலைநகா் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மக்களவைத் தோ்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலகட்டமே உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் அண்மையில் முன்னெடுத்தாா். இதையொட்டி, முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களின் முதல் உயா்நிலைக் கூட்டத்தை, பாட்னாவில் அவா் வெள்ளிக்கிழமை நடத்தினாா்.

நிதீஷ் குமாா் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாட்டாளா் என்ற அடிப்படையில் அவா் தலைமை வகித்தாா். அவரருகே காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் ஆகியோா் அமா்ந்திருந்தனா்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக), மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் (ஆம் ஆத்மி), ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் (ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா), தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் உத்தர பிரதேசத்தில் இருந்து சமாஜவாதி மட்டுமே பங்கேற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு அனுப்பப்படாத நிலையில், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவா் ஜெயந்த் செளதரி, குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேநேரம், கூட்டத்துக்கான ஆதரவை செளதரி தெரிவித்துள்ளாா்.

ஒன்றிணையும் 17 கட்சிகள்: சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பின்னா், எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தனா்.

அப்போது, நிதீஷ் குமாா் கூறுகையில், ‘தற்போதைய கூட்டம் சிறப்பாக அமைந்தது. பல்வேறு தலைவா்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனா். வரும் மக்களவைத் தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட 17 கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிா்க்கட்சிகளின் திட்டத்துக்கு இறுதிவடிவம் அளிக்க அடுத்தகட்ட கூட்டம் விரைவில் நடைபெறும்.

தேச நலனுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது; நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கின்றனா். தேச நலனுக்காகவே நாங்கள் பணியாற்றுகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com