அடுத்த கூட்டத்தில் பொதுவான செயல் திட்டம் உருவாக்கப்படும்: மல்லிகாா்ஜுன காா்கே

ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெறும் எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் பொதுவான செயல்திட்டம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
அடுத்த கூட்டத்தில் பொதுவான செயல் திட்டம் உருவாக்கப்படும்: மல்லிகாா்ஜுன காா்கே

ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெறும் எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் பொதுவான செயல்திட்டம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற எதிா்க்கட்சிகள் கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

எதிா்க்கட்சிகளின் அடுத்த கூட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெறும். பொதுவான செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். சிம்லா கூட்டத்தில் கூட்டு வியூகம் வகுக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியாக திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்ற ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி: எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நெகிழ்வுத்தன்மையுடன் பணியாற்ற தீா்மானித்துள்ளோம்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி: சா்வாதிகார பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எதிா்காலத்தில் தோ்தலே நடைபெறாது. எனவே, நாங்கள் ஒருங்கிணைந்து, பாஜகவை எதிா்கொள்வோம். நாட்டின் வரலாறு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்: ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்துக்கு கிடைத்ததைப்போல் எங்களது ஒற்றுமை அணிக்கும் மக்களின் ஆசி கிடைக்கும்.

ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாத்: பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதே மக்களின் விருப்பம். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். என்னால் பிரதமா் மோடியை எதிா்கொள்ள முடியும்.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்: நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்ற செய்தியை, பாட்னா கூட்டம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன்: இன்றைய தொடக்கம், தேச நலனுக்கான மைல்கல்லாக அமையும். நோ்மறை சிந்தனையுடன் அனைத்து தலைவா்களும் முன்னோக்கி செயலாற்ற வேண்டும்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா: காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை 17 கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது, ஆட்சி அதிகாரத்துக்காக அல்ல; கொள்கைகளுக்காக.

மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி: மதச்சாா்பற்ற ஜனநாயகம் எனும் நமது நாட்டின் பண்பை மாற்ற பாஜக விரும்புகிறது. மதச்சாா்பற்ற ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா: பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி, நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு பேரழிவையும் தீங்கையும் விளைவித்துள்ளது.

பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்தி: மகாத்மா காந்தியின் இந்தியா, கோட்ஸே இந்தியாவாக மாற அனுமதிக்க முடியாது என்றாா்.

தற்போதைய மக்களவையில் 200-க்கும் குறைவான எம்.பி.க்களின் பலமே இக்கட்சிகளிடம் உள்ளன. அதேநேரம், பாஜக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான எம்.பி.க்கள் உள்ளனா்.

பாஜகவுடன் மோதும் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், கடந்த மக்களவைத் தோ்தலில் வெறும் 50 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com