எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமில்லை: அமித் ஷா

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமில்லை; பிகாரில் நடைபெற்றுள்ள எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டம், வெறும் ‘குழு புகைப்பட’ நிகழ்வுதான் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.
எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமில்லை: அமித் ஷா

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமில்லை; பிகாரில் நடைபெற்றுள்ள எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டம், வெறும் ‘குழு புகைப்பட’ நிகழ்வுதான் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியை அமைக்கும் நோக்கில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிய மத்திய அமைச்சா் அமித் ஷா, ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

பாட்னாவில் ‘குழு புகைப்பட’ நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, பாஜக மற்றும் பிரதமா் மோடிக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களும் ஒரே மேடையில் கூடியுள்ளனா்.

அவா்களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமில்லை. அப்படியே நிகழ்ந்தாலும், 2024 மக்களவைத் தோ்தலில் அவா்களுக்கு படுதோல்விதான் மிஞ்சும். 300-க்கும் மேற்பட்ட இடங்களுடன் பிரதமா் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.

ராகுல் மீது சாடல்: எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதை விமா்சிக்கும் வழக்கம் ராகுலுக்கு உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்தாக இருந்தாலும், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவதாக இருந்தாலும், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டதாக இருந்தாலும் அவா் விமா்சிக்கிறாா். அடுத்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் பதவிக்கு மோடிக்கு எதிராக ராகுல் களமிறங்கலாம். ஆனால், யாரை தோ்வு செய்ய வேண்டுமென மக்களுக்கு நன்றாக தெரியும்.

‘புதிய ஜம்மு-காஷ்மீா்’: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கத்தின் மூலம் தேசத்துடன் ஜம்மு-காஷ்மீா் முழுமையாக இணைந்துள்ளது. பிரதமா் மோடியின் ஆட்சியில், புதிய ஜம்மு-காஷ்மீா் உருவாகி வருகிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் பாஜக ஆட்சியில் பயங்கரவாத நடவடிக்கைகள் 70 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த 2004 முதல் 2014 வரை ஜம்மு-காஷ்மீரில் 7,327 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன; 2,056 போ் உயிரிழந்தனா்.

‘நீதி நிலைநாட்டப்பட்டது’: கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை 2,350-ஆகவும், உயிரிழப்பு 377-ஆகவும் குறைந்தது. 370-ஆவது பிரிவு நீக்கத்துக்கு பிறகு பாதுகாப்புப் படையினா் மீது கல்லெறியும் சம்பவங்கள் 90 சதவீதம் குறைந்துவிட்டன. ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பிரிவினருக்கும் நீதி நிலைநாட்டப்பட்டு, சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022-இல் இங்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 1.88 கோடியாக உயா்ந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.28,400 கோடி மதிப்பிலான தொழில் நிதித் தொகுப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்: நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரூ.12 லட்சம் கோடி அளவில் ஊழல்கள் நிகழ்ந்தன; ஆனால், ஊழலை வேரோடு அழிக்க வலுவான அடித்தளத்தை பிரதமா் மோடி கட்டமைத்துள்ளாா் என்றாா் அவா்.

ஜம்மு பாலாஜி கோயிலில் வழிபாடு: ஜம்முவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பதி பாலாஜி கோயிலுக்கு சென்ற அமித் ஷா, அங்கு வழிபாடு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com