கண்ணீரை வரவழைக்கும் தக்காளி.. எப்போது விலை குறையும்?

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பணப்பையை தையல் போட முடியாத அளவுக்கு ஓட்டையாக்கிக் கொண்டிருக்கிறது தக்காளி விலை.
தக்காளி
தக்காளி

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பணப்பையை தையல் போட முடியாத அளவுக்கு ஓட்டையாக்கிக் கொண்டிருக்கிறது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் தக்காளி விலை.

ஒரு பக்கம் கடுமையான வெயில், மறுபக்கம் கனமழை என இரண்டு காலநிலையும் தக்காளி விளைச்சலைக் கடுமையாக பாதித்திருக்கிறது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, தக்காளி விலை கடுமையாக சரிந்ததால் பல விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியோடு அழுகவிட்டனர். ஆனால், ஒரு மாதத்துக்குப் பிறகு இப்படி தக்காளி விலை சதமடிக்கும் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

வழக்கமாக தக்காளி பயிரிடுவதைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான அளவிலேயே தக்காளி பயிரப்பட்டது. அதிலும் மழை, வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் வரத்துக் குறைந்து இந்த அளவுக்கு விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

100 ரூபாய் எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்த நிலையை மாற்றி 100 ரூபாய் இருந்தால்தான் தக்காளி வாங்க முடியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தினந்தோறும் தங்கம் விலை நிலவரத்தை மக்கள் பார்க்கிறார்களோ என்னவோ, கடந்த ஒரு வார வாரங்களாக தக்காளி விலை நிலவரத்தை தவறவிடுவதில்லை. அந்த அளவுக்கு தக்காளி வாங்கும்போதே கண்ணீரை வரவழைக்கிறது.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.100 முதல் 110 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ரூ.80-க்கு விற்பனையாகிறது. இந்த கடும் விலை உயா்வால் அதிருப்தியடைந்துள்ள இல்லத்தரசிகள் தக்காளி வாங்குவதை தவிா்த்து வருகின்றனா். கோயம்பேடு சந்தையில் வழக்கத்தை விடவும் குறைந்த அளவில் மக்கள் தக்காளியை வாங்கிச் சென்றனா்.

பொதுவாக ஒரு கிலோ வாங்கும் மக்கள் கூட, கால் கிலோ வாங்கிக் கொண்டு அதை சமைக்காமல் பத்திரமாக வைத்துக் கொள்வதையே சிறந்தது என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டனர்.

தமிழகத்தில் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை, வெளிச்சந்தையுடன் ஒப்பிடும் போது, ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவு. 

மேலும், பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிச்சந்தையில் தக்காளி விலையேற்றம் தற்காலிகமானதாகும். விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சா் பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் 27 கடைகளும், 2 நகரும் கடைகளும், கோவையில் 10, திருச்சியில் 13 கடைகள், ஒரு நகரும் கடை, மதுரையில் 4 பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூா், திருப்பூா், சேலம், ஈரோடு, வேலூா் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பண்ணை பசுமை நுகா்வோா் கடை செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெயிலும் குறைந்து, கனமழை பெய்த இடங்களில் வெள்ளம் வடிந்து, மீண்டும் தக்காளி உற்பத்தி பழைய நிலையை அடையும்போது விலை குறையலாம். அல்லது பண்டிகைக் காலங்கள் தொடங்கவிருப்பதால் இந்த விலையே இன்னும் சில நாள்கள் அல்லது வாரங்களுக்கும் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com