"பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பு, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்": கேம்பிரிட்ஜ் பல்கலையில் ராகுல் பேச்சு

"என்னுடைய செல்போன் பெகாசஸ்  மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது; இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது" என கேம்பிரிட்ஜ் பல்கலையில் பேசிய ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
"பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பு, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்": கேம்பிரிட்ஜ் பல்கலையில் ராகுல் பேச்சு

லண்டன்: "என்னுடைய செல்போன் பெகாசஸ்  மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது; இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது" என கேம்பிரிட்ஜ் பல்கலையில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின்(ஜேபிஎஸ்) கௌரவ விரிவுரையாளராக இருந்து வருகிறார். இவர்,   ‘21 ஆம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் புதன்கிழமை எம்பிஏ மாணவர்கள் மத்தியில் பேசினார்.

ராகுல் பேசுகையில், ‘‘அடக்குமுறை சூழலுக்கு எதிராக ஜனநாயக சூழலை உருவாக்க நமக்கு புதிய சிந்தனைகள் தேவை. அதைப்பற்றி மாணவர்களாகிய நீங்கள் ஆலோசனை நடத்த வேண்டும்.

கேட்கும் கலை மிகவும் சக்தி வாய்ந்தது. யாத்திரை எனும் புனித பயணத்தை மேற்கொள்பவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதற்காக தங்களை அமைதிப்படுத்திக் கொள்கிறார்கள்’’ என்றார்.

மேலும், அதிக எண்ணிக்கையிலான அரசியல் தலைவர்களின் செல்போன்கள் பெகாசஸ்  மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. என்னுடைய செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து, செல்போனில் பேசும்போது கவனமாக இருங்கள் என்று  தெரிவித்தனர். "என்னுடைய செல்போன் பெகாசஸ்  மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது; இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது" என்றார். 

எனவே, நமது உணர்வில் ஓர் நிலையான அழுத்தம் இருந்துகொண்டே உள்ளது. எதிர்க்கட்சிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என் மீது பல குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி என்ற வகையில், ஊடகங்கள் மீதும், ஜனநாயக கட்டமைப்பின் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம் என்று ராகுல் காந்தி கூறினார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களை எளிதில் ஒட்டுக்கேட்க முடியும். வெறும் பேச்சுக்களை மட்டுமல்லாமல், செல்போன்களில் உள்ள அத்தனை தகவல்களையும், புகைப்படங்களையும், இ-மெயில் விவரங்களையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும். இது நவீனமானது என்றாலும், இந்திய அரசியலில் கடந்த காலங்களில் பல ஒட்டுக்கேட்பு புகார்கள் எழுந்துள்ளன.

இஸ்ரேல் நாட்டின்  என்.எஸ்.ஓ. அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகலின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் தெரிவித்து இருந்தன. இதனால் நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தலைமுடி, தாடியுடன் இருந்த ராகுல் காந்தி, தற்போது இங்கிலாந்தில் அவர் தலைமுடி, தாடியை திருத்திக் கொண்டு மீண்டும் இளமையான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com