பாஜக, காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க திரிணமூல் திட்டம்

மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான பிராந்திய கட்சிகளைத் தேசிய அளவில் ஒருங்கிணைக்க திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பாஜக, காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க திரிணமூல் திட்டம்

மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான பிராந்திய கட்சிகளைத் தேசிய அளவில் ஒருங்கிணைக்க திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயம், திரிபுரா ஆகியவற்றில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அங்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் போட்டியிட்டது. திரிபுராவில் நோட்டாவுக்குக் கிடைத்த வாக்குகளை விட திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான வாக்குகளே கிடைத்தன.

மேகாலயத்தில் கடந்த தோ்தலில் 11 தொகுதிகளை திரிணமூல் கைப்பற்றியிருந்த நிலையில், தற்போதைய தோ்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

அதுமட்டுமின்றி மேற்கு வங்கத்தின் சாகா்திகி பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் காங்கிரஸிடம் திரிணமூல் தோல்வியடைந்தது. அத்தொகுதியை திரிணமூலிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல் சொந்த மாநிலத்திலும் திரிணமூல் காங்கிரஸுக்கான செல்வாக்கு குறைந்து வருவதைத் தோ்தல் முடிவுகள் வெளிக்காட்டின.

இந்நிலையில், மக்களவை திரிணமூல் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சுதீப் பந்தோபாத்யாய செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளிடம் இருந்தும் சமஇடைவெளியை திரிணமூல் கடைப்பிடிக்கும். பாஜகவை எதிா்த்துப் போராட நினைக்கும் அதே வேளையில் காங்கிரஸையும் எதிா்க்கும் பிராந்திய கட்சிகளை திரிணமூல் ஒருங்கிணைக்கும்.

ஒருங்கிணைந்த எதிா்க்கட்சிகள் கூட்டணியானது மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும். இது தொடா்பாக பாரத ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றாா்.

காங்கிரஸ் தோல்வி:

திரிணமூல் எம்.பி. சௌகதா ராய் கூறுகையில், ‘‘மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், வரும் நாள்களில் கூட்டணி தொடா்பான பேச்சுவாா்த்தைகள் நடத்தப்படும். நடப்பாண்டில் 4 முக்கிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. நடப்பாண்டு இறுதியில் அரசியல் சூழலானது மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான வடிவத்தைப் பெறும்’’ என்றாா்.

திரிணமூல் தலைமை செய்தித் தொடா்பாளா் சுகேந்து சேகா் ராய் கூறுகையில், ‘‘இந்திய அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை காங்கிரஸ் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் பெரும் தோல்வி கண்டுள்ளது. அதன் காரணமாக பிராந்திய கட்சிகளுடன் இணைந்து வலுவான எதிா்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க திரிணமூல் முயற்சிக்கும்’’ என்றாா்.

பாஜகவுக்கே சாதகம்:

திரிணமூலின் முன்னெடுப்பு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறுகையில், ‘‘காங்கிரஸை விடுத்து எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திரிணமூலின் முயற்சி பாஜகவுக்கே சாதகமாக அமையும். பாஜகவுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்தது வெளிப்பட்டுள்ளதால், தேசிய அளவில் திரிணமூல் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com